இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் சர்வதேச போலீஸ் விசாரணை! இன்று துக்கதினம் அனுசரிப்பு

கொழும்பு, இலங்கையில் இன்று துக்க தினம் அனுசரிக்கப்படுகிறது. குண்டுவெடிப்பு சம்பவங்கள் குறித்து புலனாய்வு செய்வதற்காக இன்டர்போல் டீம் இலங்கைக்கு வருகிறது.

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை , ஞாயிறன்று கொண்டாடப்பட்டது. அப்போது, 3 தேவாலயங்கள், 3 ஐந்து நட்சத்திர ஓட்டல்கள் உள்பட 8 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்தன. அடுத்தடுத்து நடந்த இந்த குண்டு வெடிப்புகளால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. குண்டு வெடிப்புகளில் பெண்கள், குழந்தைகள் என்று இது வரை 290 பேர் உயிரிழந்துள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலியானவர்களில் 31 பேர் வெளிநாட்டினர். வங்கதேசம், பிரான்ஸ், ஜப்பான், நெதர்லாந்து போர்ச்சுகல், ஸ்பெயின் நாடுகளை சேர்ந்த தலா ஒருவரும், சீனா, துருக்கி, சவுதி, ஆஸ்திரேலியா நாடுகளை சேர்ந்த தலா 2 பேரும் இந்தியாவைச் சேர்ந்த 8 பேரும் உயிரிழந்தவர்களில் அடங்குவர்.

கொழும்பு விமான நிலையத்தில் நவீன பைப் வெடிகுண்டு; இலங்கையில் தொடரும் பதற்றம்

இந்தியர்களில் லட்சுமண கவுடா ரமேஷ், லட்சுமி நாராயண், சந்திரசேகர், கே.ஜி.அனுமந்தராயப்பா, எம்.ரங்கப்பா, நாகராஜ், ரஜினா என அடையாளம் காணப்பட்டதாக கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கொழும்பு நகரில் பேட்டா பகுதியில் உள்ள மத்திய பஸ்நிலையத்தில் நேற்று 75 டெட்டனேட்டர் குண்டுகளை போலீசார் கண்டுபிடித்து எடுத்தனர். கொழும்பு சர்வதேச விமான நிலையத்திலும் ஒரு பைப் வெடிகுண்டு சிக்கியது.குண்டுவெடிப்பு குறித்து விவாதிக்க அதிபர் சிறிசேனா தலைமையில் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, அந்நாட்டில் உடனடியாக அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது.

குண்டுவெடிப்பு சதித் திட்டத்தில் உள்நாட்டு பயங்கரவாதிகளுக்கு சர்வதேச பயங்கரவாத இயக்கங்கள் உதவி புரிந்துள்ளதை உளவு அமைப்புகள் கண்டுபிடித்துள்ளன. இதையடுத்து, இன்டர்போல் என்னும் சர்வதேச போலீசாரின் உதவியை இலங்கை அரசு நாடியுள்ளது. இதைத் தொடர்ந்து இலங்கைக்கு சர்வதேச போலீஸ் டீம் அனுப்பப்படும் என்று இன்டர்போல் செகரட்டரி ஜெனரல் ஜர்ஜென் ஸ்டோக் தெரிவித்துள்ளார்.

குண்டுவெடிப்பு தொடர்பாக இது வரை 30க்கும் மேற்பட்டவர்களை போலீசார் சந்தேகத்தின்பேரில் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவர்களைப் பற்றிய விவரங்களை தெரிவிக்க இலங்கை ராணுவ துணை மந்திரி ருவன் விஜேவர்த்தனே மறுத்து விட்டார்.

இதற்கிடையே, குண்டுவெடிப்பு சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக 3 பேர் கொண்ட குழுவை இலங்கை அதிபர் சிறிசேனா நேற்று நியமித்தார். இதன் தலைவராக சுப்ரீம் கோர்ட் நீதிபதி விஜித் மலால்கோவும், முன்னாள் ஐ.ஜி. இலங்காகூன், சட்டம்-ஒழுங்கு முன்னாள் செயலாளர் படமாஸ்ரீ ஜெயமன்னே ஆகியோர் உறுப்பினர்களாகவும் இருப்பார்கள். இந்த குழு 2 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இலங்கையில் இன்று துக்க நாள் கடைபிடிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

More News >>