`எனது புற்றுநோயை குணப்படுத்தியது இது தான் - சாத்வி பிரக்யா பேச்சு
கடந்த 2006-ல் மகாராஷ்டிரா மாலேகான் மசூதி அருகே வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலின் முக்கிய குற்றவாளியாக சாத்வி பிரக்யா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து, குண்டுவெடிப்பு வழக்கு குற்றப்பத்திரிகையில் இருந்து கடந்த 2016ல் பிரக்யா பெயரை தேசிய புலனாய்வு முகமை நீக்கியது. இந்நிலையில் சமீபத்தில் அவர் அரசியலில் கால் பதித்தார். அவருக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றது பாஜக. மத்தியப்பிரதேச மாநிலத் தலைநகர் போபால் மக்களவைத் தொகுதியில் சாத்வி பிரக்யா பி.ஜே.பி வேட்பாளராகக் களமிறக்கப்பட்டிருக்கிறார்.
சாத்வி எனக் கூறிக்கொண்டு, அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து வருகிறார் பிரக்யா. இதனால் மத்தியப்பிரதேச பி.ஜே.பி மீது மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். இவரது பேச்சு நாடு முழுதும் பி.ஜே.பி-யின் கருத்தாகச் சென்றடைவதால், தலைமை இவர்மீது அதிருப்தியில் இருக்கிறது. சமீபத்தில் மும்பை தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த ஐபிஎஸ் அதிகாரி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி பின்னர் மன்னிப்பு கோரினார்.
இதற்கிடையே தற்போது, ``நான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தேன். மாட்டு சிறுநீரை அருந்தியதன் மூலம் என் புற்றுநோயை நானே குணப்படுத்திக் கொண்டேன். அத்துடன் மாடுகள் இரத்த அழுத்தம் குறையவும் நல்ல தீர்வாக உள்ளது. உதாரணத்திற்கு மாட்டின் பின்புறத்திலிருந்து அதன்முன்புறம் வரை நீங்கள் தடவிக்கொடுக்கும்பட்சத்தில், உங்களுக்கே ஒரு மகிழ்ச்சி கிடைக்கும். மாடுகளும் அந்த மகிழ்ச்சியை உணரும்" எனப் பேசியுள்ளார். மாடுகள் மீதான தாக்குதல் குறித்து கேள்விக்கு பிரக்யா இப்படி பேசியுள்ளார்.
மாலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளி சாத்வி பிரக்யா..பாஜக வேட்பாளர்! -திக்விஜய் சிங்கை எதிர்த்து போட்டி