சேப்பாக்கம் மைதானத்தை போல் வான்கடே மைதானத்துக்கு எழுந்த புது சிக்கல் - கெடுபிடி காண்பிக்கும் மகாராஷ்ட்ரா அரசு

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள 3 காலரிகளுக்கு இன்னும் மாநகராட்சி அனுமதி கிடைக்காததை காரணம் காட்டி ஐபிஎல் பைனல் போட்டி சென்னைக்குப் பதிலாக ஐதராபாத்தில் நடைபெறும் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இது சென்னை ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்று ஒரு பிரச்னை மும்பை வான்கடே மைதானத்துக்கும் ஏற்பட்டுள்ளது. குத்தகை ஒப்பந்தம் முடிந்த நிலையில் வான்கடே மைதானத்தை விட்டு வெளியேற வேண்டும் என மகாராஷ்டிரா அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

என்ன பிரச்சனை?

மும்பை கிரிக்கெட் சங்கத்துக்கு சொந்தமான வான்கடே மைதானம் 50 வருடத்திற்கு முன்பு அரசிடம் இருந்து குத்தகைக்கு வாங்கியது. மஹாராஷ்டிரா அரசுக்கு சொந்தமான இந்த மைதானத்தின் பரப்பளவு 43,977.93 சதுர மீட்டர். மும்பையின் புகழ்பெற்ற தளங்களில் ஒன்றாகவும் இது விளங்கி வருகிறது. 2011 உலகக்கோப்பை இறுதி போட்டி இங்கு தான் நடைபெற்றது.

இதற்கிடையே 50 வருட குத்தகை ஒப்பந்தம் கடந்த வருடம் பிப்ரவரி மாதத்துடன் முடிவடைந்தது. ஆனால் மும்பை கிரிக்கெட் சங்கம் இதுவரை அதனை புதுப்பிக்கவில்லை. இதனால் அரசுக்கு 120 கோடி வரி ரூபாய் பாக்கி உள்ளது. இதனால் தான் தற்போது 120 கோடி ரூபாய் பாக்கி பணத்தை கட்டுங்கள். அதன்பின் குத்தகை ஒப்பந்தத்தை புதுப்பியுங்கள். இல்லையெனில் மைதானத்தை விட்டு வெளியேறுங்கள் என்று மும்பை கிரிக்கெட் சங்கத்திற்கு அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியின் சொந்த கிரிக்கெட் மைதானமாக, வான்கடே மைதானம் இருந்து வரும் நிலையில், இந்த விவகாரம் புது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

More News >>