4 தொகுதி இடைத்தேர்தல் -அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபலங்கள் பலரின் பெயர் அறிவிக்கப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட தொகுதிகளைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகளையே வேட்பாளர்களாக அறிவித்துள்ளது அதிமுக தலைமை .
திருப்பரங்குன்றம் தொகுதிக்கு அவனியாபுரம் பகுதி அதிமுக செயலாளா எஸ்.முனியாண்டி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஒட்டப்பிடாரம் தொகுதிக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக துணைச் செயலாளர் பி.மோகன் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அரவக்குறிச்சி தொகுதி வேட்பாளராக கரூர் மாவட்ட அதிமுக இளைஞர் இளம் பெண்கள் பாசறையின் செயலாளர் வி.வி.செந்தில்நாதன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டம் சூலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு வி.பி.கந்தசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் கோவை புற நகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளராக உள்ளார்.
இந்த 4 தொகுதிகளிலும் அடுத்த மாதம் 19-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் நிலையில், அதிமுக வேட்பாளர்களை இறுதி செய்வதில் பெரும் இழுபறி ஏற்பட்டது. பிரபலங்கள் பலரின் பெயரை மாவட்ட அமைச்சர்களும், மாவட்டச் செயலாளர்களும் சிபாரிசு செய்து நெருக்கடி கொடுத்த நிலையில், கட்சியில் நீண்ட காலமாக பணியாற்றிய சம்பந்தப்பட்ட தொகுதிகளைச் சேர்ந்தவர்களையே நிறுத்தி அதிரடியாக அறிவித்துள்ளனர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியும் என்று அதிமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
திருப்பரங்குன்றம் அதிமுகவில் மல்லுக்கட்டு...! சர்ச்சை சினிமா 'கந்து வட்டி' புள்ளி வேட்பாளரா..?