காஷ்மீரின் அனந்த் நாக் தொகுதியில் ஆர்வம் காட்டாத வாக்காளர்கள் - 3% வாக்கு மட்டுமே பதிவு
ஜம்மு காஷ்மீரில் மிகவும் பதற்றம் நிறைந்த அனந்த் நாக் மக்களவைத் தொகுதியில் யாரும் வாக்களிக்க விரும்பாததால் சொற்ப அளவிலேயே வாக்குப்பதிவு நடந்துள்ளது.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது. ஆனாலும் குறிப்பிட்ட மக்களைவைத் தொகுதியில் ஒரே நாளில் வாக்குப்பதிவு நடந்தேறி விடும்.இந்நிலையில், இந்திய தேர்தல் வரலாற்றில் முதன் முறையாக தெற்கு காஷ்மீரில் உள்ள பதற்றம் நிறைந்த அனந்த் நாக் மக்களவைத் தொகுதியில் மட்டும் 3 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் குலாம் அகமது மிர், தேசிய மாநாட்டுக் கட்சி சார்பில் மசூதி ஹாஷ்னைன் உட்பட 18 பேர் களத்தில் உள்ளனர்.
இங்கு முதல் கட்டமாக அனந்த் நாக் மாவட்டத்தில் இன்றும், குல்காம் பகுதியில் வரும் 29-ம் தேதியும், புல்வாமா, சோபியான் உள்ளிட்ட பகுதிகளில் மே 7-ந் தேதியும் தேர்தல் நடைபெறுகிறது. இன்று வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகள் மிகவும் பதற்றமானவை என்பதால் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ஆனாலும் வாக்களிப்பதை புறக்கணிக்குமாறு உள்ளூர் அமைப்புகள் சில அழைப்பு விடுத்திருந்ததால் காலையில் வாக்குப்பதிவு தொடங்கிய முதல் 2 மணி நேரத்தில் ஒரு ஓட்டு கூட பதிவாகவில்லை. பொதுமக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கியதால் மொத்தம் 5 லட்சத்திற்கும் மேல் வாக்காளர்கள் உள்ள அனந்த் நாக்கில் பிற்பகல் 2 மணி வரையும் 3% சதவீதத்தினர் மட்டுமே வாக்களித்திருந்தனர்.
இதே போன்று ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடைபெறும் பிற தொகுதிகளிலும் 10% அளவுக்கே வாக்குகள் பதிவாகியுள்ளன. ஜம்மு காஷ்மீரில் 4 ஆண்டுகளாக சட்டப்பேரவை முடக்கப்பட்டு, தற்போது மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடத்தாததும் புறக்கணிப்புக்கு முக்கியக் காரணம் என்றும் கூறப்படுகிறது.
மோடி குறித்த விமர்சனம் - உச்ச நீதிமன்றத்தில் வருத்தம் தெரிவித்த ராகுல் காந்தி