பழிக்குப் பழி வாங்கவே இலங்கை குண்டுவெடிப்பு! விசாரணையில் திடுக் தகவல்!!
நியூசிலாந்தில் கிறைஸ்ட் சர்ச் என்ற இடத்தில் உள்ள மசூதியில் நிகழ்ந்த தாக்குதலுக்குப் பதிலடியே இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்புக்கான காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இலங்கை வரலாற்றில் நிகழ்த்தப்பட்ட அதி பயங்கரமான தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 310 ஆக உயர்ந்துள்ளது. ஈஸ்டர் பண்டிகையான நேற்று முன்தினம் இலங்கை தலைநகர் கொழும்பு உள்ளிட்ட இடங்களில் தேவாலயங்களில் நிகழ்த்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதல் இதயம் கொண்ட அனைவரையும் அதிர்ச்சியில் உறையச் செய்துள்ளது. இந்த தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 310 ஆக அதிகரித்துள்ளது. இதில் 41 பேரின் உடல்கள் அடையாளம் காணமுடியாத அளவுக்கு உருக்குலைந்து உள்ளன. 500-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இறந்தவர்களில் வெளிநாட்டினர் 20 பேரும் அடங்குவர்.
கேரளா, கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த எட்டு பேர் மரணம் அடைந்துள்ளனர். இலங்கையில் தற்போது 5 மருத்துவமனைகளில் சடலங்களை வைக்கக்கூட இடம் இல்லாத அளவுக்குப் பரிதாபமான சூழல் நிலவுகிறது. இந்த தாக்குதலை தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு நடத்தி உள்ளதாக இலங்கை அரசு தெரிவித்து உள்ளது. தாக்குதலில் தொடர்புடையதாக இதுவரை 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தாக்குதல் தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், ‘நியூசிலாந்தில் கிறைஸ்ட் சர்ச் என்ற இடத்தில் உள்ள மசூதியில் நிகழ்ந்த தாக்குதலுக்குப் பதிலடியே இலங்கையில் பல இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக’ தெரியவந்துள்ளது. ஆரம்பக்கட்ட விசாரணையில் தாக்குதலுக்கான காரணம் தெரிந்ததாக இலங்கை பாதுகாப்பு துணை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.
`எனது புற்றுநோயை குணப்படுத்தியது இது தான்' - சாத்வி பிரக்யா பேச்சு