மே 1 முதல் ஹெல்மெட் வாங்கினாதான், பைக் வாங்க முடியும்
தமிழக இருசக்கர வாகன தயாரிப்பாளர்கள் மற்றும் டீலர்கள் வரும் மே 1ம் தேதி முதல் இருசக்கர வாகனத்தை விற்பனை செய்யும் போது ஹெல்மெட்டும் சேர்த்துதான் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் இரு சக்கர வாகனங்கள் விபத்து அதிகம் நடக்கும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. தமிழகத்தில் ஆண்டுக்கு சராசரியாக 3 ஆயிரம் பேர் இரு சக்கர வாகன விபத்துக்களில் தங்களது உயிரை தாரை வார்க்கின்றனர். இதில் சோகம் என்னன்னா அந்த 3 ஆயிரம் பேரில் 700 பேர் சிறுவர்கள் என்பதுதான்.
தமிழகத்தில் நடக்கும் 3 விபத்துக்களில் ஒன்று இருசக்கர வாகனங்களால்தான் நடக்கிறது. அதில் இன்னொரு சோகம் என்னன்னா அந்த விபத்து நடக்கும் போது 73 சதவீத இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் இருந்துள்ளனர்.
இருசக்கர வாகன விபத்தில் உயிர் இழப்பு ஏற்படுவதை தவிர்க்கும் நோக்கில், இரு சக்கர வாகனங்கள் விற்பனை செய்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட்டும் சேர்த்து விற்பனை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் அந்த உத்தரவு முறையாக கடைப்பிடிக்கபடுகிறதா என்றால் இல்லை என்ற பதில்தான் கிடைக்கும். இந்த நிலையில் தமிழக போக்குவரத்து ஆணையர் சி. சமயமூர்த்தி, மாநிலத்தில் உள்ள அனைத்து இருசக்கர வாகன தயாரிப்பாளர்கள், டீலர்களுக்கு கடந்த 4ம் தேதி ஒரு சுற்றறிக்கை அனுப்பினார்.
அந்த அறி்க்கையில், தமிழக இருசக்கர வாகன தயாரிப்பாளர்கள் மற்றும் டீலர்கள் வரும் 1ம் தேதி முதல் இருசக்கர வாகனத்தை விற்பனை செய்யும் போது ஹெல்மெட்டும் சேர்த்துதான் விற்பனை செய்ய வேண்டும் என அதில் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆக, வரும் 1ம் தேதி முதல் புது பைக் வாங்குபவர்கள் கட்டாயம் ஹெல்மெட்டும் சேர்த்துதான் வாங்க வேண்டியது இருக்கும்.
போக்குவரத்து காவல் துறையை சோ்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ஆண்டு தோறும் சராசரியாக 13 ஆயிரம் பேர் ஹெல்மெட் அணியாமல் இருந்ததற்காக அபராதம் கட்டுகின்றனர். பலர் பேர் வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் அணிவதில்லை. சோதனை நடக்கும் பகுதிகளில் மட்டுமே ஹெல்மெட் அணிகின்றனர். போலீசிடமிருந்து தப்புவதற்காக அல்லாமல் முறையாக ஹெல்மெட் அணிந்து வாகனத்தை ஓட்டினாலே 73 சதவீத உயிர் இழப்புகளை தவிர்த்து விடலாம் என்று தெரிவித்தார்.
ஆண்டுக்கு சராசரியாக 2 கோடி ஹெல்மெட் விற்பனை நடக்கிறது. மேலும், ஹெல்மெட் விற்பனை ஆண்டுக்கு ஆண்டு 20 முதல் 25 சதவீதம் வரை அதிகரிக்கத்தான் செய்கிறது. 70 சதவீத ஹெல்மெட் தேவையை அமைப்பு சாரா நிறுவனங்கள்தான் பூர்த்தி செய்கின்றன. அதனால் ஹெல்மெட் தரம் குறித்த கேள்வியும் மக்கள் மனதில் எழத்தான் செய்கிறது.
வாகனங்களில் கட்சிக் கொடி கட்ட அனுமதி இல்லை - போக்குவரத்துத் துறை அதிரடி