`சேப்பாக்கத்தில் அதிரடி காட்டிய வார்னர், மனிஷ் பாண்டே - சி.எஸ்.கே 176 ரன்கள் இலக்கு
சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் அணி 3 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 41-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 8 மணிக்கு தொடங்கியது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். சென்னை அணியில் ஷர்துல் தாகூருக்குப் பதிலாக ஹர்பஜன் சிங் களமிறங்கியுள்ளார். ஹைதராபாத் அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளனர். வில்லியம்சன் இன்று விளையாடவில்லை. அதேபோல் நதீமுக்கு பதிலாக மனிஷ் பாண்டே சேர்க்கப்பட்டார். அதன்படி முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு இரண்டாவது ஓவரே அதிர்ச்சி காத்திருந்தது. ஓப்பனிங் வீரர் பேர்ஸ்டோவை டக் அவுட் செய்தார் ஹர்பஜன்.
அதன்பின்னர் வார்னருடன் மனிஷ் பாண்டே கைகோர்த்தார். இருவரும் அதிரடியாக விளையாடினர். 57 ரன்கள் எடுத்த நிலையில் வார்னர் அவுட் ஆனார். இருப்பினும் மறுமுனையில் இருந்த மனிஷ் பாண்டே சிறப்பாக விளையாடினார். அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து 83 ரன்கள் எடுத்தார். அவரின் உதவியுடன் ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக ஹர்பஜன் சிங் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.