கடைசி நிமிடத்திலும் கூட ஆம்ஆத்மியுடன் கூட்டணி சேர தயார்! ராகுல்காந்தி பேட்டி!!
ஆம் ஆத்மி கட்சியுடன் கடைசி நிமிடத்திலும் கூட கூட்டணி சேருவதற்கு காங்கிரஸ் தயாராக உள்ளது என்று ராகுல்காந்தி கூறியுள்ளார். ஆனால், இது வெறும் வெட்டிப் பேச்சு என்று மறுத்திருக்கிறார் கெஜ்ரிவால்.
டெல்லியில் ஏழு மக்களவை தொகுதிகள் உள்ளன. அங்கு இப்போது ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சராக உள்ளார். கடந்த முறை டெல்லியின் ஏழு தொகுதிகளையும் பா.ஜ.க.வே வென்றது. இம்முறை பா.ஜ.க. மீது மக்களுக்கு அதிருப்தி நிலவுவதால், பெரிய கட்சிகளான ஆம் ஆத்மியும், காங்கிரசும் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டால் ஏழு தொகுதிகளையும் இந்த அணி வென்று விடும் என்று கணிப்புகள் கூறுகின்றன. ஆனால், இரு கட்சிகளும் பேரம் பேசுவதில் விட்டு கொடுக்காமல் சண்டை போட்டன. தற்போது இரு கட்சிகளுமே டெல்லி தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து விட்டன.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஒரு பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
ஆம் ஆத்மி கட்சியுடன் கடைசி நிமிடத்திலும் கூட, அதாவது வேட்பு மனு தாக்கல் முடியும் போது கூட கூட்டணி சேருவதற்கு நாங்கள் தயார். ஆனால், ஆம் ஆத்மி கட்சி கூட்டணிக்கு ஹரியானாவையும் சேர்த்து பேசுவதை கைவிட வேண்டும். ஏற்கனவே டெல்லியில் ஆம் ஆத்மி 4, காங்கிரஸ் 3 தொகுதிகளில் போட்டியிடலாம் என்று கெஜ்ரிவால்தான் பார்முலாவை சொன்னார். அதனால், அவர் இறங்கி வந்தால் கூட்டணிக்கு வாய்ப்பிருக்கிறது. இவ்வாறு ராகுல்காந்தி கூறியுள்ளார்.
ஆனால், இதற்கு கெஜ்ரிவால், ‘‘ராகுல் காந்தி வெறும் வெட்டிப் பேச்சாகவே அப்படி சொல்கிறார். அவர் கடந்த வாரம், கூட்டணி குறித்து ட்விட்டரில் செய்திகளை வெளியிட்டார். உலகத்தில் எங்காவது ட்விட்டரில் கூட்டணி பேசுவார்களா? அவர் பா.ஜ.க.வுக்கு விட்டு கொடுப்பது போல் தெரிகிறது. எங்களுக்கு 2 வாய்ப்புகள்தான் இருக்கின்றன. முதலாவது, காங்கிரசுக்கு 3 தொகுதிகளை அளிப்பதன் மூலம் அந்த தொகுதிகளை பா.ஜ.க.வுக்கு தாரை வார்த்து விட்டு, மீதி 4ல் வெற்றி பெறுவதாகும். இரண்டாவதாக, 7 தொகுதிகளிலும் நாங்களே போட்டியிட்டு வெற்றிக்கு முயற்சிப்பதாகும். நாங்கள் 2வது வாய்ப்பை எடுத்துள்ளோம்’’ என்றார்.
ராகுல் காந்தி 'ஓகே' சொன்னால் மோடியை எதிர்த்துப் போட்டி - பிரியங்கா திட்டவட்டம்