பொன்பரப்பி சம்பவத்தை இழிவாக பேசி வீடியோ வெளியிட்ட 9 பேர் அதிரடி கைது
நாகை மாவட்டம் தரங்கம்பாடியில், பொன்பரப்பி சம்பவத்தை குறிப்பிட்டு இழிவாக பேசி வீடியோ வெளியிட்ட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தில் கடந்த 18ம் தேதி மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடந்த போது, அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில், சிதம்பரம் தொகுதி தி.மு.க. கூட்டணி வேட்பாளர் திருமாவளவனின் சின்னமான பானையை சிலர் போட்டு உடைத்தனர். இதனால் பா.ம.க. மற்றும் வி.சி.க. கட்சியினருக்கு இடையே மோதல் நடைபெற்றது. மேலும், வரையப்பட்ட 20க்கும் மேற்பட்ட வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. இரு சக்கர வாகனமும் தீக்கிரையாக்கப்பட்டது. இந்த வன்முறை வெறியாட்டத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இந்த நிலையில், பொன்பரப்பி நடந்த மோதலைக் குறிப்பிட்டு, நாகையைச் சேர்ந்த சிலர் மற்றொரு சமூகத்தினரை இழிவாகப் பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது. இதனால் பிரச்சனை ஏற்படாமலிருக்க, அந்த வீடியோ குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
அந்த வீடியோவை வெளியிட்ட தரங்கம்பாடியை அடுத்த எடுத்துக்கட்டி சாத்தனூரைச் சேர்ந்த 15 பேர் மீது பொறையார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அவர்களில் 9 பேரை போலீசார் தற்போது கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
ட்விட்டர்: இந்தியாவுக்கு புதிய மேலாண் இயக்குநர்