விதிகளை மீறும் பிரதமர் மோடி...! தேர்தல் ஆணையம் சாட்டையை சுழற்றுமா?
தேர்தல் நன்னடத்தை விதிகளை தொடர்ந்து காற்றில் பறக்க விடும் பிரதமர் மோடி மீது எதிர்க்கட்சிகள் கடும் கோபத்தில் உள்ளன. தற்போது குஜராத்தில் நேற்று வாக்களித்த பின் ஊர்வலம் சென்ற பிரதமர் மீது காங்கிரஸ் கொடுத்த புகாரில் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது தேர்தல் ஆணையம் .
தற்போது நடைபெற்று வரும் மக்களவைப் பொதுத் தேர்தலில் பிரதமர் மோடி முக்கிய பிரச்சார ஆயுதமாக, பாகிஸ்தான் மீது இந்தியப் படைகள் நடத்திய தாக்குதலையே முன்னெடுத்துச் செல்கிறார். ராணுவத்தை எந்த விதத்திலும் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது என்று தேர்தல் ஆணையம் கடுமை காட்டினாலும் பிரதமர் மோடி விடுவதாக இல்லை.
பாலா கோட் தாக்குதல், புல்வாமாவில் இந்திய வீரர்கள் வீர மரணத்தை குறிப்பிட்டு, முதல் தலைமுறை வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை அர்ப்பணிக்க வேண்டும் என்றார். இதற்கு எதிர்ப்பு கிளம்ப, மீண்டும் நோட்டீஸ் அனுப்பியதுடன் நிறுத்திக் கொண்டது தேர்தல் ஆணையம் .
ஆனாலும் பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்ட இந்திய விமானப் படை விமானி அபிநந்தன் விடுதலை விவகாரத்தில் அந்நாட்டை தாம் எச்சரித்ததாகவும், இந்தியாவிடம் உள்ள அணு ஆயுதம், ஏவுகணைகளை, தீபாவளி பட்டாசு வெடிப்பதற்காகவா வைத்துள்ளோம் என்பது போன்று மூச்சுக்கு மூச்சு அணுகுண்டு, வெடிகுண்டு, ஏவுகணை என்ற வார்த்தைகளை பிரயோகித்து பாஜகவின் செல்வாக்கை நிலைநிறுத்தப் பார்க்கிறார் பிரதமர் மோடி.
நேற்று தனது சொந்த ஊரான குஜராத்தின் காந்தி நகரில் ஓட்டுப் போட்ட பின்பும்,ஒவ்வொரு வாக்காளனின் கையில் உள்ள வாக்காளர் அட்டை தான் மிகப் பெரிய குண்டு என்று அங்கும் குண்டு வீசினார்.இதன் பின் கெத்தாக வாக்குச்சாவடியிலிருந்து பாதுகாப்பு படை புடைசூழ ஊர்வலம் சென்றவர் பொதுவெளியில் கெத்தாக பிரச்சாரமும் செய்துள்ளார்.
மோடியின் இந்த அப்பட்டமான விதிமீறயைத் தான் காங்கிரஸ் இப்போது பெரிய குற்றச்சாட்டாக தேர்தல் ஆணையம் முன் முன்வைத்துள்ளது. இந்த விதி மீறல்களுக்கு தண்டனையாக, உ.பி.யில் அம்மாநில முதல்வர் யோகி மற்றும் மேனகா காந்தி, மாயாவதி, அசம்கான் போன்றோருக்கு 2 முதல் 3 நாட்களுக்கு பிரச்சாரம், பேட்டி போன்றவைகளுக்கு தடை போட்டது போல், பிரதமர் மோடிக்கும் வாய்ப்பூட்டு என்ற தண்டனையை தேர்தல் ஆணையம் வழங்க வேண்டும் என்று புகாரில் கூறியுள்ளது. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் பிரதமர் மோடி மீது என்ன விதமான தண்டனை கொடுக்கப் போகிறது என்பது ஓரிரு நாளில் தெரிந்துவிடும்.
நாட்டுக்கு இன்னும் நிறைய செய்வார் மோடி! மனைவி ஜசோதா பென் பேட்டி!!