சூடு பிடிக்க தொடங்கிய தமிழக இடைத்தேர்தல் களம்! ஓர் பார்வை
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் நான்கு சட்டமன்றத் தொகுதிக்கான வேட்பாளர்களைப் பிராதான கட்சிகள் அறிவித்துள்ள நிலையில், இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியது.
திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம் ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் மே 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. 18 தொகுதிகளுக்கு மக்களவைத் தேர்தலுடன் இடைத்தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், அடுத்து இந்த நான்கு தொகுதிகளும் கவனம் பெற்றுள்ளன.
இந்த தேர்தல் களத்தில் கட்சிகள் சார்பில் களம் இறக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள்:
திருப்பரங்குன்றம் திமுக சார்பில் டாக்டர்.சரவணன் அறிவிக்கப்பட்டுள்ளார் . அவர், இந்த தொகுதியில் வெற்றிபெற்ற ஏ.கே.போஜன் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடர்ந்தவர். அதிமுக சார்பில் அவனியாபுரம் பகுதி செயலாளர் எஸ்.முனியாண்டி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் அமமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ மகேந்திரன் போட்டியிடுகிறார்.
எம்.எல்.ஏ கனகராஜ் மறைவால் காலியான சூலூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி அறிவிக்கப்ப்டுள்ளார். அதிமுக சார்பில் கோவை புறநகர் மாவட்ட அம்மா பேரவைத்தலைவர் வி.பி.கந்தசாமி போட்டியிடுகிறார். அமமுக சார்பில் முன்னாள் எம்.பி சுகுமாரும் நிறுத்தப்பட்டுள்ளார்.
அரவக்குறுச்சி தொகுதியில் திமுக சார்பில் செந்தில்பாலாஜி அறிவிக்கப்பட்டுள்ளார்.தகுதி நீக்கம் செய்யப்பட எம்.எல்.ஏ-களில் ஒருவரான செந்தில்பாலாஜி அண்மையில் அமமுக-வில் இருந்து விலகி திமுக-வில் இணைந்தவர். இந்த தொகுதியில் அதிமுக வேட்பாளராகக் கரூர் மாவட்ட இளைஞர் பாசறைச் செயலாளர் வி.வி.செந்தில்நாதன் அறிவிக்கப்ப்டுள்ளார். அமமுக வேட்பாளராக அமமுக ஜெ பேரவைத் தலைவரான சாகுல் ஹமீது களம் இறக்கப்பட்டுள்ளார்.
ஓட்டப்பிடாரம் தனித் தொகுதியில் திமுக சார்பில் எம்.சி.சண்முகையா போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர் பெ.மோகனும் அமமுக வேட்பாளராக சுந்தராஜன் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில், அமமுக சார்பில் போட்டியிடும் சுந்தராஜ் அதே தொகுதியில் தகுதி நீக்கம் செய்யப்படச் சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.
திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிட இதுவரை பத்து சுயேச்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். ஓட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிட இதுவரை சுயேச்சைகள் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் மே 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் நிலையில், இதற்கான வேட்புமனு தாக்கலுக்கு வரும் 29-ம் தேதி கடைசி நாளாகும். இறுதி வேட்பாளர் பட்டியல் மே 2-ம் தேதி வெளியிடப்படுகிறது. இந்நிலையில், தேர்தல் தேதி நெருங்கிவிட்டதால் நான்கு தொகுதிகளிலும் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது.
ஒட்டப்பிடாரத்தில் சுயேச்சையாக போட்டி? அதிமுகவை மிரட்டும் கிருஷ்ணசாமி!