இது அரசியல் பேட்டி இல்லையாம் மீண்டும் தேர்தல் விதிமுறைகளை மீறுகிறாரா மோடி?

மக்களவைத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது நடிகர் அக்‌ஷய் குமாருடன் கலந்துரையாடுவது போன்ற ஒரு பேட்டியை தற்போது பிரதமர் மோடி நடத்தி வருகிறார். ஆனால், இது அரசியல் பேட்டி அல்ல என்று தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி ஓட்டுப் போட்டு விட்டு வெளியே வந்து வாக்காளர் அட்டை அணுகுண்டை விட வலிமையானது; அதை நாட்டு மக்கள் வீணாக்கக்கூடாது என தேர்தல் விதிகளை மீறி தங்கள் கட்சிக்காக பிரசாரம் செய்யும் தொனியில் வாக்கு சேகரித்தார்.

இந்நிலையில், தற்போது நடிகர் அக்‌ஷய் குமாருடன் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார்.

இந்த கலந்துரையாடலில் அரசியல் அல்லாத கேள்விகள் கேட்கப்படுவதாக அறிவித்துள்ளனர். ஆனால், மோடி மற்றும் ஒபாமாவின் நட்பு குறித்தும், எதிர்கட்சித் தலைவர்களில் உங்களின் நண்பர்கள் யார் என்ற கேள்வியும் கேட்கப் பட்டுள்ளன.

அந்த கேள்விக்கு பதிலளித்த நரேந்திர மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆண்டுதோறும் தனக்கு குர்த்தாக்களை பரிசாக வழங்கி வருகிறார் என பதில் அளித்துள்ளார்.

மேலும், தினமும் தான் 3-4 மணிநேரங்கள் மட்டுமே தூங்குவதால், ஒபாமா தன்னிடம் நீண்ட நேரம் தூங்குங்கள் என அறிவுறுத்தியதாகவும் கூறியுள்ளார்.

மேலும், அரசியலில் ஆர்வமில்லை என்றும் சன்னியாசியாக வேண்டும் என்றே ஆசைப்பட்டேன் என இந்து வாக்காளர்களை கவரும் அம்பையும் எய்துள்ளார்.

தான் எம்.எல்.ஏ.,வாக மாறிய பின்னர் தான் தன்னிடம் வங்கி கணக்கு வந்தது என்று கூறி, தான் ஏழை மக்களுக்கு வங்கி கணக்குகளை துவக்கியுள்ளேன் என்பதை மறைமுகமாக தெரிவித்து வருகிறார்.

பிரதமர் மோடியின் இந்த மறைமுக அரசியல் பேட்டி குறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா என்பது விரைவில் தெரிய வரும். நிச்சயம் இந்த பேட்டியை கண்காணித்து வரும் எதிர்கட்சியினர் இதற்கு கண்டனம் தெரிவித்து தேர்தல் ஆணையத்திடம் முறையிடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டுக்கு இன்னும் நிறைய செய்வார் மோடி! மனைவி ஜசோதா பென் பேட்டி!!
More News >>