இஸ்லாமியர்களின் தொழுகைக்கு மரியாதை செலுத்தி நெகிழ வைத்த முதல்வர்!

இஸ்லாமியர்களின் தொழுகை பாடல் ஒலித்தபோது கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மரியாதை செலுத்தியது அனைவரையும் நெகிழ வைத்தது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கன்னியாகுமரி மாவட்ட மாநாட்டையொட்டி திங்கள் நகரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கேரள முதல்வர் பினராயி விஜயன் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது, “பாஜக அரசு அனைத்து அடிப்படை மாண்புகளையும் தகர்த்துக் கொண்டிருக்கிறது. நாங்கள் உண்பதையே நீங்கள் உண்ண வேண்டும் எனக்கூறுவதோடு வீடுகளில் புகுந்து பரிசோதனை செய்கிறார்கள். கொலை செய்கிறார்கள்.

ராஜஸ்தானில் லவ் ஜிகாத் எனக்கூறி ஒரு மனிதனை உயிரோடு எரித்துக் கொன்றார்கள். அந்த மனிதன் அலறித்துடிப்பதை வீடியோ எடுத்து வெளியிட்டதை நாமெல்லாம் காண வேண்டிய கொடுமை நிகழ்ந்தது. இதற்கு எதிராக நாடு முழுவதும் வலுவான குரல்கள் எழுந்தன.

இந்த படுகொலையை பாஜக, ஆர்எஸ்எஸ்காரர்கள் நியாயப்படுத்திய தோடு புகழவும் செய்தார்கள். கொலையாளியின் வங்கிக் கணக்குக்கு பெருந்தொகையை சங்பரிவார் அமைப்பினர் அனுப்பியுள்ளனர்” என்று குற்றம் சாட்டினார்.

பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் பினராயி விஜயன் உரையாற்றிக் கொண்டிருந்த பொழுது, திங்கள்நகரில் உள்ள இஸ்லாமியர்களின் பள்ளி தொழுகை நேரத்தில் அந்த ஒலிசத்தம் கேட்டதும் தனது உரையை நிறுத்தி விட்டு 5 நிமிடம் மவுனமாக நின்று அவர்களின் தொழுகைக்கு மரியாதை செலுத்தினார்.

பிறகு மீண்டும் தனது உரையை தொடர்ந்தார். பினராயி விஜயன் அவர்களின் இந்த நடவடிக்கையால் நெகிழ்ந்த கூட்டத்தினர் பலத்த கரகோஷம் எழுப்பினர். இந்த நிகழ்வு பொதுக்கூட்டத்திலிருந்த அனைத்து மக்களையும் மெய்சிலிர்க்க வைத்தது.

More News >>