காவிரியில் மூழ்கி பலியான 5 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம்- முதல்வர் உத்தரவு
காவிரியில் மூழ்கி பலியான 5 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் முதல் அமைச்சர் நிவாரண நிதியிலிருந்து வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டம், பொத்தனூர் கிராமம், பெரியண்ணன் கோவில் சந்து பகுதியைச் சேர்ந்த சரவணன் மற்றும் அவருடைய குடும்ப நண்பர்கள் என மொத்தம் 6 நபர்கள் நேற்று காலை காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கியதில் சரவணன், அவருடைய மனைவி ஜோதி மணி, மகன்கள் தீபகேஷ், சாரகேஷ் மற்றும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக் என்பவரின் மனைவி தேவி ஆகிய 5 நபர்களின் உடல்கள் சடலமாக கண்டெடுக்கப்பட்டது என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வருத்தம் அடைந்தேன்.
காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 5 நபர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். காவிரி ஆற்றில் மூழ்கிய செல்வி ஹர்சிகா என்பவரை தேடும் பணியில், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் மற்றும் வருவாய் துறையினர் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே, கோடை விடுமுறை நாட்களில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளோடு நீர் நிலைகள், ஆறுகள் மற்றும் ஏரிகளில் குளிக்க செல்லும் போது, காவல் துறையினர் மற்றும் பொதுப்பணித்துறையினரால் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே குளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
மேற்கண்ட துயரச் சம்பவத்தில் உயிரிழந்த 5 நபர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
அதிமுக ஆட்சிக்கு நெருங்கும் ஆபத்து?