நகை வியாபாரிடம் ரூ.2 லட்சம் மதிப்பலான ராசிகற்களை கொள்ளையடித்த போலி போலீஸ் கும்பல்

சென்னை மண்ணடியில் ராசிக்கல் வியாபாரியை கட்டிப் போட்டு, ரூ.2 லட்சம் மதிப்பிலான ராசிக்கற்களை கொள்ளையடித்துச் சென்ற போலி லஞ்ச ஒழிப்பு போலீஸ் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் ராசிக்கல் வியாபாரி ஜபானா ரெட்டி சீனிவாச ராவ். இணையதளம் மூலம் ராசிக்கற்களை விற்கும் இவரை சென்னையில் இருந்து ஒருநபர் தொலைபேசி மூலம் பேசி ரூ.2 லட்சத்துக்கு ராசிக்கற்கள் வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் சென்னைக்கு ராசிக்கற்களை கொண்டு வரும்படி அந்த நபர் கூறியுள்ளார்.அந்த நபரின் பேச்சை நம்பி, ரூ.2 லட்சம் மதிப்பிலான ராசிக்கற்களை எடுத்துக் கொண்டு வந்த ஜபானா ரெட்டி, பாரிமுனை மூர் தெருவில் உள்ள விடுதியில் தங்கியுள்ளார். கடந்த 20ஆம் தேதி இரவு அவரது அறையின் கதவைத் தட்டிய 4 பேர், தங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் எனக் கூறியுள்ளனர்.

அறையை சோதனையிட வேண்டும் எனக் கூறிய அவர்கள், ஜபானா ரெட்டியைக் கட்டிப் போட்டுள்ளனர். முகேஷ் ஜெயின் என்ற மற்றொரு வியாபாரியின் பெயரைக் கூறி அவரை எங்கே என்று அவர்கள் கேட்டதாகவும் கூறப்படுகிறது. பின்னர் அவரிடம் இருந்த ராசிக்கற்களை எடுத்துக் கொண்டு அந்த நபர்கள் தப்பித்துள்ளனர்.

இதுதொடர்பாக, வடக்கு கடற்கரை காவல்நிலையத்தில் ஜபானா ரெட்டி புகார் கொடுத்துள்ளார். இதை அடுத்து அந்த விடுதியில் சோதனை மேற்கொண்ட போலீசார், ராசிக்கற்களை கொள்ளையடித்த 4 பேரின் சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றியுள்ளனர். கொள்ளை சம்பவம் நடந்த இரவு அன்று அந்த நான்கு பேரில் ஒருவனுக்கு மும்பையில் இருந்து செல்போன் அழைப்பு வந்துள்ளது. அதன்படி கொள்ளைக் கும்பல் தலைவன் மும்பையில் இருக்கலாம் என போலீசார் கூறியுள்ளனர். தனிப்படை அமைத்து விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

நாய் குட்டிகளை கவரில் போட்டு குப்பை தொட்டியில் போட்டு சென்ற பெண் கைது
More News >>