பிரதமர் மோடி வாரணாசியில் நாளை வேட்பு மனு பிரியங்கா எதிர்ப்பாரா...?-நீடிக்கும் சஸ்பென்ஸ்
வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிடும் பிரதமர் மோடி நாளை வேட்பு மனுத்தாக்கல் செய்கிறார். இதையொட்டி வாரணாசியில் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் பங்கேற்கும் பிரமாண்ட பேரணிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் மோடியை எதிர்த்து பிரியங்கா நிறுத்தப்படுவாரா? என்ற சஸ்பென்ஸ் இன்னமும் நீடிக்கிறது.
கடந்த 2014 தேர்தலில் வாரணாசியில் போட்டியிட்ட பிரதமர் மோடி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை 3 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி வாகை சூடினார். இம்முறை கடைசி கட்டமாக மே 19-ல் நடைபெற உள்ள தேர்தலில் வாரணாசியில் மீண்டும் போட்டியிடும் பிரதமர் மோடி, நாளை வேட்பு மனுத் தாக்கல் செய்ய உள்ளார்.
இதற்காக 2 நாள் பயணமாக இன்று பிற்பகல் வாரணாசி செல்கிறார் பிரதமர் மோடி. இன்று மாலை கங்கைக் கரையில் சிறப்புப் பூஜைகளும் செய்கிறார். அதற்கு முன் கங்கை நதிக்கரையோரம் பிரமாண்ட பேரணியாக பிரதமர் மோடி அழைத்துச் செல்லப் படுகிறார். இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களான பீகார் முதல்வர் நிதீஷ் குமார், பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் மத்திய அமைச்சர்கள் பலரும் பங்கேற்கின்றனர்.
அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் கடந்த இரு தினங்களுக்கு முன்பே வாரணாசி சென்று விட்டார். அங்கேயே சில நாட்கள் தங்கி மோடிக்காக தேர்தல் பணிகளிலும் ஓ பிளஸ் ஈடுபட உள்ளார் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே வாரணாசியில் மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி நிறுத்தப்படுவாரா? என்ற சஸ்பென்ஸ் இன்னும் நீடிக்கிறது. ஏனெனில் அந்த தொகுதிக்கு காங்கிரஸ் இன்னமும் வேட்பாளரை அறிவிக்காமலே சஸ்பென்ஸை நீடிக்கச் செய்து வருகிறது. இதனால் கடைசி நேரத்தில் பிரியங்கா பெயர் அறிவிக்கப்பட்டாலும் ஆச்சர்யம் இல்லை என்று கூறப்படுகிறது.
விதிகளை மீறும் பிரதமர் மோடி...! தேர்தல் ஆணையம் சாட்டையை சுழற்றுமா?