காணாமல் போன பெட்ரோல் பங்க் ஊழியர் முட்புதரில் பிணமாக கண்டெடுப்பு காணாமல் போன குன்றத்தூர் பெட்ரோல் பங்க் ஊழியர் முட்புதரில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.
குன்றத்தூரை அடுத்த பழந்தண்டலம் அம்பேத்கார் தெருவை சேர்ந்தவர் பாஸ்கர். இவருடைய மகன் தீபக்ராஜ் (25). குன்றத்தூரில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் தீபக்ராஜ் வேலை பார்த்து வந்தார். கடந்த 15-ந்தேதி நண்பர் ஒருவரின் திருமணத்துக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்றார். அதன்பிறகு தீபக்ராஜ் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் தெரிந்தவர்களிடம் விசாரித்து பார்த்தும் தீபக்ராஜ் எங்கே இருக்கிறார் என்பது தெரியவில்லை. இதையடுத்து, தனது மகனை காணவில்லை என்று குன்றத்தூர் போலீஸ் நிலையத்தில் பாஸ்கர் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான தீபக்ராஜை தேடி வந்தனர்.
பல்வேறு இடங்களில் தேடியும் பயன் இல்லை. இந்த நிலையில் தாம்பரம் அருகே முள்புதரில் ஒரு வாலிபர் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்ற பார்த்தனர். அப்போது, தாம்பரத்தை அடுத்த வரதராஜபுரத்தில் தீபக்ராஜ் வெட்டுக் காயங்களுடன் ஒரு முள்புதரில் பிணமாக கிடந்தார்.
அவரை யாரோ சரமாரியாக வெட்டி கொலை செய்து இருப்பது தெரிய வந்தது. உடல் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டது. பெட்ரோல் பங்க் ஊழியர் தீபக்ராஜ் கொலை செய்யப்பட்டதற்கு முன் விரோதம் காரணமா? காதல் விவகாரமா? அல்லது வேறு காரணமா என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது.
அவரை கொலை செய்தது யார்? ஏற்கனவே அறிமுகமானவர்களா? அல்லது மர்ம கும்பல் கடத்திச் சென்று கொன்றதா என்பது குறித்து சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
டிக்-டாக் தடை நீக்கம் - நிபந்தனையுடன் சிக்னல் கொடுத்த நீதிபதிகள்