சும்மா நின்ற ஏர்இந்தியா விமானம் திடீரென தீ்ப்பிடித்தது: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய போயிங் விமானம்
டெல்லி விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் ரக விமானத்தில் நேற்றிரவு திடீரென தீப்பிடித்தது. இதனால் போயிங் நிறுவனத்தின் விமான தயாரிப்புகள் குறித்த சர்ச்சை மேலும் அதிகரித்துள்ளது.
பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா டெல்லியிலிருந்து சான் பிரான்சிஸ்கோவுக்கு விமான சேவையை நடத்தி வருகிறது. சான்பிரான்சிஸ்கோவுக்கு இயக்கப்படும் ஏர் இந்தியா விமானம் டெல்லி விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்து. விமானத்தின் குளிர்சாதன கருவியில் நேற்றிரவு பழுது பார்க்கும் பணி நடைபெற்றது.
அப்போது, துணை மின் அலகு பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு விமானத்தில் பற்றிய தீ அணைக்கப்பட்டது. விபத்தின் போது பயணிகள் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது என்றும், இது ஒரு சிறிய விபத்து என்றும் ஏர் இந்தியா நிறுவனம் கூறியுள்ளது.
போயிங் நிறுவனத்தின் போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்கள் தொடர்ந்து விபத்துக்குள்ளானதை தொடர்ந்து பல்வேறு நாடுகள் அந்த ரக விமானங்கள் பறக்க தடை விதித்தது. சீனா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா ஐரோப்பியக் கண்டம் எனப் பல நாடுகள் தடை விதித்தன. இந்தியாவும் போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம் பறக்க தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது தீ பிடித்த ஏர் இந்தியா விமானம் வேறு ரக மாடல் போயிங் விமானம் என்றாலும், போயிங் நிறுவனத்தின் விமான தயாரிப்புகள் குறித்து தற்போது கேள்வி எழுந்துள்ளது.
‘மாற்றம் மிகவும் அவசியமானது..!’ –நம்பிக்கையில் காத்திருக்கும் விஜய் சேதுபதி