ஐபிஎல் ஆடினது போதும்.. உடனடியாக நாடு திரும்புங்க.. வெளிநாட்டு வீரர்களுக்கு வந்த அதிரடி உத்தரவு!
12வது ஐபிஎல் சீசன் தீவிரமாக நடந்து வரும் நிலையில், ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் வெளிநாட்டு வீரர்கள் நாடு திரும்ப உத்தரவு வந்துள்ளது.
ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் 8 அணிகளில் வெளிநாட்டு வீரர்களின் பங்கு பெரும் அளவில் இருந்து வரும் நிலையில், அடுத்த மாதம் மே 30ம் தொடங்கவுள்ள உலகக் கோப்பை போட்டிக்குத் தயாராக உடனடியாக நாடு திரும்புங்கள் என அந்த அந்த நாடுகளின் கிரிக்கெட் வாரியம் உலக கோப்பை போட்டிகளுக்காகத் தேர்வாகியுள்ள வீரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
நாளை(ஏப்ரல் 26)க்குள் நாடு திரும்ப வேண்டும் என இங்கிலாந்து வீரர்களுக்கு உத்தரவு வந்துள்ளதால், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பலம் வாய்ந்த தூணான பேர்ஸ்டோ இப்போதே இங்கிலாந்துக்கு புறப்பட்டு விட்டார். ஆஸி வீரர் டேவிட் வார்னரும் விரைவில் புறப்பட உள்ளதால், சன்ரைசர்ஸ் அணி பலவீனம் அடைந்துள்ளது.
ஆஸ்திரேலிய அணி வீரர்களுக்கான உலகக் கோப்பை வலைப் பயிற்சி வரும் மே 2 முதல் பிரிஸ்பேனில் நடைபெற உள்ளதால், ஆஸ்திரேலிய வீரர்களும் மே 1ம் தேதிக்குள் ஆஸ்திரேலியா புறப்பட உள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டுபிளஸிஸ், இம்ரான் தாஹீர் மட்டுமே தங்கள் நாடுகளுக்கு செல்ல உள்ளதால், சென்னை அணிக்கு பெரிய பாதிப்பு இல்லை.
பெங்களூரு அணியில் மொஹின் அலி, ஸ்டோயினிஸ், ஸ்டெயின், டிம் சவுதி என முக்கிய ஆட்டக்காரர்கள் வெளியேறுவதால், அந்த அணிக்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், பிளே ஆஃப் சுற்றுக்கு அந்த அணி தேர்வாகாத பட்சத்தில், அந்த அணியில் இருந்து யார் சென்றால் தான் என்ன என்ற சூழல் உருவாகவும் வாய்ப்புள்ளது.
கொல்கத்தா அணியின் சிக்ஸர் மெஷின் ஆண்ட்ரு ரஸலும் தனது நாட்டுக்கு செல்கிறார் என்ற செய்திதான் ஐபிஎல் ரசிகர்களை பெரிதும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
இதனால், ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்று சற்று சுவாரஸ்யம் குறைந்ததாகவே காணப்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
பந்தை மறந்த அம்பயர்.... கலாய்த்த வர்ணணையாளர்கள்.... பெங்களூரு போட்டியில் நடந்த சுவாரஸ்யம்