பாலியல் பலாத்கார முயற்சியில் சிறுமியை கொன்ற டிரைவருக்கு ஆயுள் தண்டனை

வேலூரில், பாலியல் பலாத்கார முயற்சியில் சிறுமியை கொன்ற வழக்கில், சுமார் 10 ஆண்டுக்கு பிறகு குற்றவாளியான டிரைவருக்கு தண்டனை கிடைத்துள்ளது. குற்றவாளிக்கு நீதிமன்றம் ஆயுள் சிறை தண்டனை விதித்தது.

குடியாத்தம் அருகே உள்ள மொரசப்பள்ளி ராமலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சிவா (வயது 38). இவர், வேலூரில் உள்ள ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். 2009-ம் ஆண்டு வேலூரை அடுத்த நெல்வாய் கிராமத்தில் ஒரு தனியார் நிறுவனத்தின் கட்டுமானப் பணி நடந்தது. இதற்காக சிவா அடிக்கடி அப்பகுதிக்குச் சென்று வந்தார்.

2009-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10-ந் தேதி சிவா கட்டுமானப் பணி நடக்கும் பகுதிக்குச் சென்றார். அப்போது அப்பகுதியில் உள்ள விவசாய நிலம் வழியாக 14 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமி நடந்து சென்று கொண்டிருந்தார். அதனை பார்த்த சிவா அந்த சிறுமியை பின்தொடர்ந்து சென்று திடீரென மடக்கி பிடித்து, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். அதிர்ச்சி அடைந்த சிறுமி அவரிடம் இருந்து தப்பி செல்ல முயன்றார். மேலும் காப்பாற்றுங்கள்... எனச் கூச்சல் போட்டுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சிவா, சிறுமியின் வாயை பொத்தி, அப்பகுதியில் கிடந்த கல்லில் தலையை மோதினார். பலத்த அடியால் மயக்கமடைந்த சிறுமியின் கழுத்தைப் பிளேடால் அறுத்துக் கொலை செய்து விட்டு, உடைகளை களைந்து நிர்வாணமாக்கி அங்குள்ள விவசாயக் கிணற்றில் உடலை வீசினார். களைந்த சிறுமியின் உடைகளை அங்கேயே தீ வைத்து எரித்து விட்டு தப்பி சென்றார்.

இதுகுறித்து வேலூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமியை கொலை செய்தது சிவா என உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை வேலூர் கூடுதல் விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி குணசேகரன் விசாரித்து நேற்றுமுன்தினம் தீர்ப்பு கூறினார்.

பாலியல் பலாத்கார முயற்சியில் சிறுமியை கொலை செய்த குற்றத்துக்காக சிவாவுக்கு ஆயுள்தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும், சிறுமியின் உடைகளை களைந்து தீ வைத்து எரித்து, தடயங்களை அழிக்க முயற்சி செய்ததற்காக 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், அபராதத்தொகையைச் செலுத்த தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறைதண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். சிவா, பலத்த காவலுடன் அழைத்துச் செல்லப்பட்டு மீண்டும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பல ஆண்டுகளாக வழக்கு நடந்து வந்தபோதிலும், இறுதியில் குற்றவாளிக்கு தண்டனை கிடைத்ததால் பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பண பலம் அதிகார பலத்தால் நீதித்துறையை கட்டுப்படுத்த முடியாது - உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆவேசம்
More News >>