பிரதமரின் ஹெலிகாப்டரை சோதனையிட்டு சஸ்பென்ட் ஆன ஐஏஎஸ் அதிகாரி - மீண்டும் பணியில் சேர்ப்பு மூக்குடைபட்ட தேர்தல் ஆணையம்

ஒரிசாவில் பிரதமர் மோடி பிரச்சாரத்திற்கு சென்ற போது அவருடைய ஹெலிகாப்டரை சோதனையிட்ட விவகாரத்தில், தேர்தல் ஆணையத்தால் சஸ்பென்ட் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஐஏஎஸ் அதிகாரி மீதான நடவடிக்கைக்கு மத்திய பணியாளர் தீர்ப்பாயம் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, மூக்குடைபட்ட தேர்தல் ஆணையம் , சஸ்பென்ட் உத்தரவை திரும்பப் பெற்றுள்ளது.

கர்நாடக மாநில ஐஏஎஸ் கேடர் அதிகாரியான முகம்மது மோஷின், ஒடிசா மாநிலத்தின் சம்பல்பூர் தொகுதியின் தேர்தல் பொதுப் பார்வையாளராக நியமிக்கப்பட்டிருந்தார். இரு வாரங்களுக்கு முன் சம்பல்பூருக்கு தேர்தல் பிரச்சாரம் செய்யச் சென்ற பிரதமர் மோடியின் ஹெலிகாப்டரை முகம்மது மோஷின் திடீரென சோதனையிட்டார். பிரதமர் சிறப்பு பாதுகாப்பு கமாண்டோக்களின் எதிர்ப்பை மீறி சோதனை நடத்தியது என்று கூறி ஐஏஎஸ் அதிகாரி முகம்மது மோஷினை சஸ்பென்ட் செய்தது தேர்தல் ஆணையம் .

தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை கடும் விமர்சனத்திற்கு ஆளானது. பிரதமர் மோடி, சோதனைக்கு அப்பாற்பட்டவரா? என்று காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்ததுடன், கர்நாடக மாநிலத்திற்கு பிரதமர் சென்ற போது, ஹெலிகாப்டரில் இருந்து மர்மப் பெட்டி ஒன்று ரகசியமாக எடுத்துச் செல்லப்பட்டது பற்றியும் கேள்வி எழுப்பியிருந்தன.

இந்நிலையில் ஐஏஎஸ் அதிகாரி மீது சஸ்பென்ட் நடவடிக்கை எடுத்தது தவறு என்று மத்திய அரசு பணியாளர் தீர்ப்பாயம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கர்நாடக முதல்வர் குமாரசாமி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோரின் ஹெலிகாப்டர்களை அதிகாரிகள் சோதனையிட்ட போது நடவடிக்கை எடுக்காத தேர்தல் ஆணையம் , பிரதமர் மோடி விஷயத்தில் அக்கறை காட்டியது ஏன்? என்றும் கேள்வி கேட்டதுடன், சஸ்பென்ட் நடவடிக்கையை கைவிடுமாறும் அறிவுறுத்தியது.

இதையடுத்து ஐஏஎஸ் அதிகாரி முகம்மது மோஷினை உடனே பணியில் சேர்த்துக் கொள்ளுமாறு கர்நாடக அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆனாலும் நிர்வாக ரீதியாக அந்த அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு கர்நாடக அரசுக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

பிரதான மந்திரியா? பிரச்சார மந்திரியா? பிரியங்கா, அகிலேஷ் சாடல்!
More News >>