தமிழக வேட்பாளர்களே! கேரளாவைப் பாருங்க..!
கேரளாவில் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் ஒரு உருப்படியான காரியத்தை செய்திருக்கிறார்கள். அதை நம்ம தமிழ்நாட்டு வேட்பாளர்களும் பின்பற்றினால் மக்கள் சந்தோஷப்படுவார்கள்!
கேரளாவில் உள்ள 20 மக்களவை தொகுதிகளிலும் தேர்தல் நடந்து முடிந்து விட்டது. எர்ணாகுளம் தொகுதி இடதுசாரி கூட்டணி வேட்பாளர் ராஜீவ், தேர்தல் பணிகளுக்காக தனது கட்சி நிர்வாகிகளை கொண்டு சில வாட்ஸ் அப் குரூப்களை உருவாக்கியிருந்தார்.
அந்த தொகுதியில் கடந்த ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு முடியவும், ராஜீவ் தனது வாட்ஸ் அப் குரூப்களில் தொண்டர்களுக்கு ஒரு உத்தரவு போட்டார். அதாவது, தொகுதியில் எந்தெந்த இடங்களில் தனக்காக போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்ததோ அதையெல்லாம் கிழித்தெறிந்து சுத்தம் செய்ய வேண்டும், சுவர் விளம்பரங்களையும் அழித்து வெள்ளை அடிக்க வேண்டும் என்றும் 2 நாளில் இதை முடிக்க வேண்டும் என்றும் அதில் கூறியிருந்தார். அதற்கு ‘கிளீன் எர்ணாகுளம்’ என்று தலைப்பும் போட்டார்.
தேர்தல் நேரத்திலேயே பணம் தராவிட்டால் படுத்து விடும் கட்சிக்காரர்களைப் போல் இல்லாமல் காம்ரேடுகள் மிகவும் அக்கறையாக அந்தப் பணியை செய்து முடித்து விட்டார்களாம். இது பற்றி ராஜீவ் கூறுகையில், ‘‘எனது வேண்டுகோளுக்கு நண்பர்களிடம் நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தது. அதனால், எல்லா இடங்களிலும் எங்கள் விளம்பரங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன’’ என்றார்.
கம்யூனிஸ்ட்களே இப்படி என்றால், தூய்மை பாரதம் என்று கோஷமிடும் பா.ஜ.க. வேட்பாளர் ஒன்றும் செய்யவில்லையா? என்று கேட்பீர்கள். அதே எர்ணாகுளம் தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் கே.ஜே.அல்போன்சும் தனது போஸ்டர்களை உடனடியாக அகற்றச் சொல்லி விட்டார். அவர் கூறுகையில், ‘‘எனக்கு சுவர் விளம்பரம், போஸ்டர் ஒட்டுவதே பிடிக்காது. ஆனால், நான் தொகுதிக்கு வரும் போது மற்ற கட்சிகள் அதிகமாக போஸ்டர்களை ஒட்டியிருந்தார்கள். அதனால் நானும் சில இடங்களில் பேனர் வைக்க வேண்டியதாயிற்று. அவற்றை அகற்றி விட்டோம்’’ என்றார்.
இதே போல், திருவனந்தபுரம் பா.ஜ.க. வேட்பாளரான கும்மணம் ராஜசேகரன் இன்னொரு நல்ல காரியம் செய்திருக்கிறார். அதாவது தனக்கு போடப்பட்ட சால்வைகள், துண்டுகளை எல்லாம் சிறிய பைகளாக தைத்து மக்களுக்கு கொடுத்துள்ளார். இது பற்றி அவர் கூறுகையில், ‘‘எனக்கு தினமும் நூறு சால்வை, துண்டுகளாவது வந்து விடும். இப்படி ஒரு லட்சத்திற்கு மேல் சேர்ந்து விட்டது. அதை துணிப்பைகளாகவும், தலையணை உறைகளாகவும் மாற்றி ஏழை மக்களுக்கு கொடுத்து வருகிறேன். துணிப்பைகள் அளிப்பதன் மூலம் பிளாஸ்டிக் ஒழிப்பு பிரச்சாரம் செய்கிறோம்’’ என்றார்.
இதெல்லாம் நம்ம தமிழ்நாட்டு வேட்பாளர்களின் எண்ணத்தில் ஏன் உதிக்கவில்லை? சரி, கேரளா பார்த்தாவது இப்படி செய்யுங்களேன்!
இப்போதெல்லாம் விஜய் சேதுபதி எங்கு சென்றாலும் தனி விமானங்கள் தான்.. ஏன் தெரியுமா