மக்களின் பணத்தை அள்ளி வங்கிகளுக்கு தருவது சரியல்ல - ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர்

வங்கிகளின் பங்கு மூலதன அளவை அதிகரிக்க வேண்டும் என்ற பெயரில் பொதுமக்களின் பணத்தை அள்ளி வங்கிகளுக்கு தருவது சரியான நடவடிக்கை இல்லை என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் குற்றம் சாட்டி உள்ளார்.

கடந்த 2003ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக ஒய்.வி ரெட்டி இந்தியாவில் வங்கித்துறையின் இன்றைய நிலை என்ற தலைப்பில் ஹைதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசினார்.

அப்போது பேசிய அவர், “சர்வதேச ஒப்பந்தங்களால் தற்போது அரசு எடுக்கும் கொள்கை முடிவுகளின் பளு, நிதி நிர்வாகத்தை அதிகமாக பாதிக்கிறது. அதை தவிர்க்க முடிந்தால் பிரச்சனையை சமாளிக்கலாம். உதாரணமாக சர்வதேச அளவில் போட்டி என்பதற்காக இந்திய வங்கிகள் சில கட்டாய நெருக்கடிகளை இன்று சந்திக்க வேண்டியுள்ளது.

சர்வதேச வங்கிகளில் உள்ள அளவுக்கு இங்கும் தேவை என்பது வங்கிகளின் மீதும் அதன் நிர்வாகனத்தின் மீது தேவையில்லாத பளு. தற்போது இந்திய வங்கிகளில் பன்னாட்டு வெளிநாட்டு முதலீடு அபாயகரமான அளவுக்கு அதிகரித்துள்ளது. அதை குறைக்க வேண்டும்.

வங்கிகளின் பங்கு மூலதன அளவை அதிகரிக்க வேண்டும் என்ற பெயரில் இன்று பொதுமக்களின் பணத்தை அள்ளி வங்கிகளுக்கு தருவது என்பதும் சரியான நடவடிக்கை இல்லை.

வாராக்கடன் அதிகரித்தற்கு காரணமானவர்கள் யார் என்பதை ஆய்வு செய்து அவர்களை பொறுப்பாக்க வேண்டும். இந்திய ரிசர்வ் வங்கி இதற்கான நடவடிக்கை தொடங்க வேண்டும். இதற்கு ரிசர்வ் வங்கியிலேயே உயர் மட்ட குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.

More News >>