பிரியங்கா போட்டியிடாததற்கு உண்மையான காரணம் என்ன?

மக்களவைத் தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிடாதது ஏன்? என்பது தேசிய அரசியலில் ஒரு விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.

பிரதமர் மோடியை எதிர்த்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடப் போவதாக 2 வாரங்களாக நீடித்து வந்த சஸ்பென்சுக்கு அக்கட்சி முற்றுப்புள்ளி வைத்து விட்டது. கடந்த முறை மோடியை எதிர்த்து போட்டியிட்ட அஜய்ராய் மீண்டும் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். ஆனாலும், வேறொரு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவாரோ என்றும் ஒரு சந்தேகம் கிளப்பப்பட்டது. அது வெறும் புரளி என்று காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், பிரியங்கா காந்தி போட்டியிட்டால் அவரது வேட்புமனுவை நிராகரிக்கத் திட்டமிட்டிருந்ததாகவும், அது தெரிந்தே அவர் பின்வாங்கி விட்டார் என்றும் கூறப்பட்டது. காரணம், லெப்டினன்ட் கர்னல் முகுல் சவுகான் என்பவர் பிரியங்காவுக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அதில் அவர், ‘‘நீங்கள் மக்களவை தேர்தலில் போட்டியிடப் போவதாக கூறியிருக்கும் செய்தியை படித்தேன். நீங்கள் இத்தாலி நாட்டைச் சேர்ந்த சோனியாவுக்கு மகளாக 12.1.1972ம் தேதி பிறந்திருக்கிறீர்கள்.

இத்தாலி நாட்டு அரசியல் சட்டத்தின்படி இத்தாலியர் ஒருவருக்கு உலகில் எங்கு குழந்தை பிறந்தாலும் அந்த குழந்தைக்கு அந்நாட்டு பிரஜை என்ற உரிமையுண்டு. அதன்படி, நீங்களும் இத்தாலி பிரஜைதான். அதை நீ்ங்கள் உதறி விட்டு, இந்தியக் குடியுரிமை பெற்றிருக்கிறீர்களா? அப்படியிருந்தால் அதன் நகலை எனக்கு அனுப்புங்கள். அல்லது நான் நீங்கள் போட்டியிடுவதை சட்டரீதியாக எதிர்ப்பேன்’’ என்று கூறியிருந்தார். இதை சமூக ஊடகங்களிலும் பரவச் செய்தார்.

இது பற்றி, பா.ஜ.க. மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், ‘‘பிரதமரை எதிர்த்து பிரியங்கா போட்டியிடுவார் என்ற பா.ஜ.க. கவலைப்படவே இல்லை. அவர் எங்களை வெறுப்பூட்டுவதற்காக வேண்டுமென்றே 2 வாரங்களாக பில்டப் செய்தார். கடந்த முறை ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால், மோடியை எதிர்த்து சீரியஸாக போட்டியிட்டார். அவரைப் போல் கூட பிரியங்காவால் ஓட்டு வாங்க முடியாது. அதனால், நாங்கள் அவர் போட்டியிடுவதை தடுக்கவில்லை. அவராக பின்வாங்கி விட்டார்’’ என்றார்.

காங்கிரஸ் மூத்த தலைவர்களிடம் கேட்ட போது, அவர்கள் கூறியதாவது:

பிரியங்காவின் வேட்புமனுவை யாரும் நிராகரிக்க முடியாது. சோனியா காந்தி 2004ல் போட்டியிட்ட போது கூட அதை தடுக்க முயன்று தோற்றுப் போனார்கள். எனவே, அது பிரச்னை அல்ல. பிரியங்கா காந்தியைப் பொறுத்தவரை எல்லா எதிர்க்கட்சிகளும் ஆதரித்தால் போட்டியிடத் தயாராகவே இருந்தார். ஆனால், சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கூட்டணி திடீரென பின்வாங்கி மோடிக்கு எதிராக டம்மி வேட்பாளரை நிறுத்தி விட்டது.

இன்னொருபுறம், உத்தரபிரதேசத்தில் கட்சியை வலுப்படுத்தி விட்டு தேர்தலில் பிரியங்கா போட்டியிடலாம் என்று சோனியா கூறி விட்டார். ராகுல்காந்தி போட்டியிடும் அமேதி, வயநாடு ஆகிய 2 தொகுதிகளிலும் வென்றால், அமேதி தொகுதியில் ராஜினாமா செய்வார். அந்த இடைத்தேர்தலில் பிரியங்கா போட்டியிடுவார். அது மட்டுமல்ல. 2022ல் நடைபெற உள்ள உ.பி. சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிப்பதற்காக பிரியங்கா தீவிரமாக பணியாற்றவிருக்கிறார். தேவைப்பட்டால் அவர் முதலமைச்சர் வேட்பாளராக கூட அப்போது நிறுத்தப்படலாம்’’ என்றனர்.

பிரதான மந்திரியா? பிரச்சார மந்திரியா? பிரியங்கா, அகிலேஷ் சாடல்!
More News >>