ஜெயலலிதா மரணம் குறித்த நீதி விசாரணைக்கு தடை! உச்சநீதிமன்றம் அதிரடி!!

ஜெயலலிதா மரணம் குறித்த நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷனின் விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா நோய்வாய்ப்பட்டு, சென்னை அப்போலோ மருத்துவமனையில் 75 நாட்கள் தங்கி சிகிச்சை பெற்ற நிலையில் மரணம் அடைந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகங்கள் எழுந்தன. இதையடுத்து, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷனை தமிழக அரசு நியமித்தது.

இந்த விசாரணை கமிஷன் பலருக்கும் சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொண்டது. மேலும், அப்போலோ மருத்துவமனை நிர்வாகிகள் மற்றும் டாக்டர்களுக்கும் சம்மன் அனுப்பி விசாரித்தது. இந்நிலையில், டாக்டர்களுக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்ட போது அதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் அப்போலோ மருத்துவமனை வழக்கு தொடுத்தது. இதை விசாரித்த உயர்நீதிமன்றம், ‘‘ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகங்கள் எழுந்துள்ளதால், அது குறித்து விசாரணை கமிஷன் எழுப்பும் கேள்விகளை தவறு என்று அப்போலோ நிர்வாகம் கூறுவதை ஏற்க முடியாது’’ என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து அப்போலோ நிர்வாகம், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு அப்போலோ தரப்பு வழக்கறிஞர் நேற்று ஆஜராகி அவசர வழக்காக எடுக்க வலியுறுத்தினார். அதை நீதிபதிகள் ஏற்கவில்லை.

இந்நிலையில், இன்று அந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. அப்போது அப்போலோ சார்பில், ‘‘விசாரணை கமிஷனில் மருத்துவர்கள் பல முறை ஆஜராகி தகவல்களை அளித்த பின்பும் மீண்டும் மருத்துவர்களுக்கு சம்மன் அனுப்பப்படுகிறது. அதன் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். அந்த ஆணையம் அமைத்த தமிழக அரசின் ஆணையை ரத்து செய்ய வேண்டும்’’ என்று வாதிடப்பட்டது.

இது தொடர்பாக விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், ஆறுமுகசாமி விசாரணைக் கமிஷனுக்கு இடைக்காலத் தடை விதித்தனர்.

அதிமுக.வை கைப்பற்றும் ஆசையை துறக்கிறாரா டி.டி.வி. தினகரன்?
More News >>