பொன்.மாணிக்கவேல் நியமனத்துக்கு எதிரான 66 மனுக்களை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்

சிலை கடத்தல் வழக்கு சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதற்கு எதிராக காவல்துறை அதிகாரிகள் உள்பட 66 பேர் தொடர்ந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

சிலைக் கடத்தல் வழக்குகள் குறித்து காவல்துறை அதிகாரி பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. ஆனால் அதற்கு தமிழக அரசு தடை விதித்தது. மேலும், சிலை கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற தமி்ழக அரசு உத்தரவிட்டது.

தமிழக அரசின் உத்தரவுக்கு எதிராக டிராபிக் ராமசாமி, யானை ராஜேந்திரன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தனர். இதனையடுத்து உயர் நீதிமன்றம் தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதித்தது. மேலும் பொன் மாணிக்கவேலை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்து உத்தரவிட்டது.

உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. அதை விசாரித்த உச்ச நீதிமன்றம் சிலை கடத்தல் வழக்கை பொன் மாணிக்கவேல் தொடர்ந்து விசாரணை நடத்தவும், சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றிய தமிழக அரசாணையை ரத்து செய்யவும் உத்தரவிட்டது.

இந்த சூழ்நிலையில் காவல் துறை அதிகாரிகள் உள்பட 66 பேர் பொன். மாணிக்கவேல் நியமனத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் 66 மனுக்களையும் இன்று தள்ளுபடி செய்தது. இதனால் இனி சிலை கடத்தல் வழக்குகள் விசாரணையை பொன். மாணிக்கவேல் தீவிரப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

1,500 கிலோ மீட்டர் தொலைவில்....வட தமிழகத்தை நெருங்கும் ஃபனி புயல்...!
More News >>