2 இடத்தில் ஓட்டு...! கவுதம் காம்பீருக்கு சிக்கல்..! வழக்கு தொடுத்த ஆம் ஆத்மி வேட்பாளர்
கிழக்கு டெல்லி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் பிரபல கிரிக்கெட் நட்சத்திரம் கவுதம் காம்பீருக்கு புதிய சிக்கல் உருவாகியுள்ளது. 2 தொகுதிகளில் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருக்கும் காம்பீர் மீது கிரிமினல் வழக்கு பதிய வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் புகார் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்ற பிரபல கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் பாஜகவில் இணைந்தார். கட்சியில் இணைந்த சூட்டோடு அவரை கிழக்கு டெல்லி வேட்பாளராக அறிவித்தது பாஜக . இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் பந்தாவாக வேட்பு மனுவும் தாக்கல் செய்தார் கவுதம் காம்பீர்.
இந்நிலையில் கவுதம் காம்பீர் தேர்தலில் போட்டியிட தகுதி இல்லை. டெல்லியில் இரு தொகுதிகளில் அவருக்கு ஓட்டு உள்ளது. இது சட்டப்படி குற்றம் என்று கூறி, கிழக்கு டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடும் அதிசி என்பவர் டெல்லி தீஸ் ஹசாரி கோர்ட்டில் கவுதம் காம்பிர் மீது கிரிமினல் வழக்குத் தொடர்ந்துள்ளார். அதில், டெல்லியன் கரோல் பாக் மற்றும் ராஜீந்தர் நகர் ஆகிய இரு தொகுதிகளில் காம்பீருக்கு ஓட்டுரிமையும், அடையாள அட்டையும் வைத்துள்ளார் என்பதற்கான ஆதாரங் களை இணைத்து, காம்பீர் போட்டியிட தடை கோரி கிரிமினல் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனால் காம்பீர் போட்டியிடுவதில் சிக்கல் எழுமா? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே ஆம் ஆத்மி தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தனது டிவிட்டர் பதிவில், விரைவில் தகுதி இழக்கப் போகும் நபருக்கு வாக்களித்து ஓட்டை வீணாக்கி விடாதீர்கள் என்று காம்பீரின் பெயரைக் குறிப்பிடாமல் தெரிவித்து பரபரப்பை அதிகரிக்கச் செய்துள்ளார்.
ஒரு கை தட்டுனா ஓசை வராது… தினேஷ் கார்த்திக்கின் அதிரடி வீண்; ராஜஸ்தான் ராயல்ஸ் அசத்தல் வெற்றி!