டிடிவி ஆதரவு எம்எல்ஏ-க்களுக்கு நோட்டீஸ்: அதிமுகவின் குறுக்கு வழி..! விளாசும் தங்க.தமிழ்செல்வன்

தமிழக அரசியல் களம் இன்று பரபரப்புடன் காணப்படுகிறது. சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம், அ.தி.மு.க கொறாடா ராஜேந்திரன் ஆகியோர் சபாநாயகர் தனபாலை, தலைமைச் செயலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளார்கள். டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்படும் எம்.எல்.ஏ-களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக அந்த ஆலோசனை நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.

ஆகையால், அ.தி.மு.க கொறடா புகாரின் அடிப்படையில், டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. வழக்கமாக ஒரு எம்.எல்.ஏ-வை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றால், முதலில் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டக வேண்டும். அதன்பிறகு, அனுப்பப்பட்ட நோட்டீஸ்க்கு கடிதம் மூலமாகவோ அல்லது நேரில் சென்றோ அந்த எம்.எல்.ஏ-கள் விளக்கம் அளிக்க வேண்டும். இதன் அடிப்படியில், அறந்தாங்கி ரத்தினசபாபதி, கள்ளக்குறிச்சி பிரபு, விருத்தாசலம் கலைச்செல்வன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவாகியுள்ளது என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதோடு, தேர்தலில் தி.மு.க.வை ஆதரித்த எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரிக்கும் நோட்டீஸ் அனுப்ப வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது.

இந்நிலையில், அ.தி.மு.க-வின் இந்த நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள அமமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்க.தமிழ்செல்வன், ‘எம்.எல்.ஏ-க்களுக்கு நோட்டீஸ் அனுப்புவது மூலம் ஆட்சியைத் தக்க வைக்க அதிமுக முயன்று வருகிறது. குறுக்கு வழியில் ஆட்சியைத் தக்க வைக்க முயற்சி செய்கிறது. அ.தி.மு.க –பாஜக கூட்டணி தோல்வி அடைவது உறுதியாகி விட்டது. சபாநாயகர் செயல் தொடர்பாக ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவரிடம் அமமுக முறையிடும்’ என்றார்.

அ.தி.மு.கவில் தற்போது 114 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளார்கள். அதில்,அமமுக ஆதரவு எம்.எல்.ஏ-கள், தமிமுன் அன்சாரி மற்றும் அ.தி.மு.க-வுக்கு எதிரான மனநிலையில் உள்ள கருணாஸ் ஆகியோரை கழித்தால் 109 சட்டமன்ற உறுப்பினர்கள்தான் இருப்பார்கள். ஆகையால், சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டிய சூழல் உள்ளது.

நடைமுறை சிக்கலா? அரசின் அலட்சியம்...! –டிடிவி தினகரன் ‘பளார்’
More News >>