1,500 கிலோ மீட்டர் தொலைவில்....வட தமிழகத்தை நெருங்கும் ஃபனி புயல்...!
தென்கிழக்கு வங்கக்கடலில் புயல் உருவாகும் வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலெர்ட்’ விடுத்திருந்தது.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மையம் இயக்குநர் பாலச்சந்திரன், ‘தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் கடல் சீற்றமாக இருக்கிறது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. அது வட தமிழகத்தின் கடற்கரை பகுதியில் இருந்து தென்கிழக்கே சுமார் 1,500 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும். இந்த புயல் இலங்கை கடல் வழியாக 30-ம் தேதி வட தமிழகம்-தெற்கு ஆந்திரா கடல் பகுதியை நோக்கி நகரும். ஆகையால், மீனவர்கள் வரும் 26 முதல் 30ம் தேதி வரை மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். உருவாகியுள்ள இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வட தமிழகத்தில் அநேக இடங்களில் கன மழை முதல் மிக கன மழை பெய்யக்கூடும்’ என்றார்.
1966-ம் ஆண்டுக்குப் பிறகு, தமிழகத்தில் கோடை காலத்தில் கரை கடக்கும் புயல் ஃபனி ஆகும். லைலா, ரோனோ ஆகிய புயல்கள் தமிழக கரைக்கு அருகே வந்து, கரையைக் கடக்காமல் சென்று விட்டது. இருப்பினும், புயல் மூலம், தமிழகத்தில் மழை பெய்தது. தற்போது, உருவாக உள்ள ஃபனி புயலால் தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
புயல் கரையைக் கடக்கும் போது தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையைத் தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.
தமிழகத்தை தாக்க வருகிறது கோடை புயல்; 29ம் தேதி முதல் கனமழை எச்சரிக்கை!