கையில் ரூ.38,750 மட்டுமே உள்ளது..கார் இல்லை! மோடி தகவல்
கையிருப்பு தொகை ரூ.38,750 மட்டுமே உள்ளதாக வேட்பு மனு பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டு இருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
ஏழு கட்டங்களாக நடக்கும் மக்களவைத் தேர்தலின், மூன்று கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், கடைசிக் கட்ட தேர்தல் வரும் மே 19ம் தேதி நடக்கவுள்ளது. அதன்படி, உத்தர பிரதேசத்தில் நடைபெறும் கடைசிக் கட்ட தேர்தலில், பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். இரண்டாவது முறையாக வாரணாசியில் போட்டியிடுகிறார் மோடி. இதற்காக, நேற்று வாரணாசியில் பாஜக சார்பில் பிரமாண்ட பேரணி நடத்தப்பட்டது. இதில், பாஜக முக்கிய தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட பலரும் கலந்துகொண்டனர். இதனையடுத்து, வாரணாசியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய மோடி, பின் கால பைரவர் கோயில் வழிபாடு செய்தார். அதன் பிறகு, இன்று காலை 11.30 மணியளவில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார் பிரதமர் மோடி.
பிரதமர் மோடி தாக்கல் செய்த வேட்பு மனு பிரமாண பத்திரத்தில், கையிருப்பு தொகை ரூ.38,750 மட்டுமே உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், சொந்தமாக கார், இரு சக்கர வாகனம் என சொந்தமாக எதுவும் கிடையாது என்று குறிப்பிட்டுள்ளார். ரூ.1.41 கோடி மதிப்பில் அசையும் சொத்துகள், ரூ.1.10 கோடி அசையா சொத்துக்கள், வங்கி இருப்பு ரூ.4,143, எஸ்.பி.ஐ வங்கியில் நிரந்தர வைப்புத்தொகை ரூ.127 கோடி, ரூ.1,13,800 மதிப்பில் 4 கிராம் தங்க மோதிரம் இருப்பதாகப் பிரமாண பத்திரத்தில் தெரிவித்து இருக்கிறார்.
வேட்பு மனு பிரமாண பத்திரத்தில் மோடி குறிப்பிட்டுள்ள தகவல்களை தற்போது, சமூக ஊடகங்களில் வெளியிட்டு விவாதிக்கத் தொடங்கியுள்ளனர் நெட்டிசங்கள்.
வாரணாசியில் பிரதமர் மோடி வேட்பு மனுத்தாக்கல் - கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்பு