கிழிந்த ஷூ வுடன் ஓடினேன்...! சொந்தக் காசில் கத்தார் சென்றேன்...! தங்க மங்கை கோமதியின் குமுறல்

கத்தாரில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவுக்கு தங்கம் வென்று சாதனை படைத்த திருச்சி வீராங்கனை கோமதி மாரிமுத்து இன்று சென்னை திரும்பினார். தான் கிழிந்த ஷூ உடன் ஓடி தங்கம் வென்றதாக கூறிய கோமதியின் ஆதங்கம் தமிழகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய விளையாட்டுத்துறையின் லட்சணம் இதுதான் என்று வெட்கி தலை குனிய வைத்து விட்டது என்றே கூறலாம்.

தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் ஒரு குக்கிராமத்தில் பிறந்தவர் கோமதி மாரிமுத்து . கத்தார் தலைநகர் தோஹாவில் நடந்த ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்த கோமதி, ஒரே நாளில் புகழின் உச்சிக்கு சென்று ஆகா, ஓஹோன்னு புகழப்பட்டு வருகிறார். ஆனால் அவர் இந்த சாதனையைப் பெற, பட்ட பாடுகள் கொஞ்ச நஞ்சமில்லை என்பதும், சாமான்யனுக்கு நமது அரசுகள் எவ்வித உதவிகளையும் செய்வதில்லை என்பதும் அவருடைய வார்த்தைகளில் வெளிப்பட்டுள்ளது.

தங்கம் வென்ற சாதனையுடன் இன்று சென்னை திரும்பிய கோமதிக்கு விமான நிலையத்தில் விளையாட்டு ஆர்வலர்களும், பல்வேறு அமைப்பினரும், தனியார் பள்ளி மாணவர்களும் உற்சாக வரவேற்பளித்து கொண்டாடி மகிழ்ந்தனர். ஆனால் ஒப்புக்குக் கூட தமிழக அரசுத் தரப்பில் அமைச்சர்களோ, விளையாட்டுத்துறை அதிகாரிகளோ யாரும் கோமதியை வரவேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. இது தமிழக அரசின் மரபை மீறிய செயல் என்பதுடன், விமான நிலையத்தில் கோமதி கூறிய வார்த்தைகள், ஒட்டு மொத்தமாக அனைவரின் நெஞ்சங்களையும் பதைபதைக்க வைத்துவிட்டது என்றே கூறலாம்.

என்னுடைய கிராமத்திற்கு போக்குவரத்து வசதியோ, சாலை வசதியோ எதுவும் கிடையாது. கஷ்டப்பட்டு தான் ஓட்டப் பயிற்சி எடுத்தேன். கொஞ்சம், கொஞ்சமாக சேர்த்து வைத்த சொந்தக் காசில்தான் விமான டிக்கெட் எடுத்து தோகா சென்று போட்டியில் பங்கேற்றேன்.

மற்ற வீரர், வீராங்கனைகள் ராயலாக விதவிதமான ஆடைகள் அணிந்து வந்த நிலையில் என்னால் எளிமையான ஆடைகள் தான் அணிய முடிந்தது. இது கூடப் பரவாயில்லை... போட்டியில் ஓடும் போது கிழிந்த ஷூ வுடன் தான் ஓடி தங்கம் வென்றேன். தங்கம் வென்றதை என்னால் நம்பவே முடியவில்லை. பதக்கம் வாங்க ஸ்டேஜில் நின்றிருந்த சமயம் நமது தேசிய கீதம் ஒலித்ததை கேட்ட போது மெய்சிலிர்த்து ரசித்தேன் என்று கோமதி கூறிய வார்த்தைகள் அனைவரையும் கலங்கடிக்கச் செய்துள்ளது.

இது தான் இந்திய அரசும், தமிழக அரசும் விளையாட்டில் பெரும் ஆர்வம் கொண்டு, சாதனை படைக்க துடிக்கும் சாமானியர்களுக்கு கொடுக்கும் ஊக்கத்தின் லட்சணம் என்பது கோமதியின் வார்த்தைகளில் தெளிவாகிவிட்டது. ஆயிரக்கணக்கான கோடிகளை கொட்டி கிரிக்கெட் போன்ற ஆடம்பர விளையாட்டுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் ஒரு சிறு பங்காவது, விளையாட்டில் சாதிக்கத் துடிக்கும் சாமானியர்களுக்கு கொடுத்தால் மட்டுமே சர்வதேச அரங்கில் விளையாட்டில் நம்மால் சாதிக்க முடியும் என்பதற்கு கோமதியின் கசப்பான அனுபவங்களே சாட்சி.

ஆண் குழந்தைக்கு ஒரு ரேட்.. பெண் குழந்தைக்கு ஒரு ரேட்.. கலர் குழந்தைக்கு தனி ரேட்.. நர்ஸ் அமுதாவின் பகீர் ஆடியோ ரிலீஸ்
More News >>