தன் உயிரை இழந்து இந்தியாவின் விமானந்தாங்கி போர்க்கப்பலை காப்பாற்றிய வீரர்

கர்நாடகாவில், இந்திய கடற்படையின் விமானந்தாங்கி போர்க்கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்கும் போது மூச்சு திணறி கடற்படை அதிகாரி ஒருவர் மரணம் அடைந்தார்.

இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா விமானந்தாங்கி போர்க்கப்பல் நேற்று காலையில் கர்நாடகாவின் கார்வார் துறைமுகத்துக்கு வந்தது. இந்த கப்பல் துறைமுகத்துக்குள் நுழையும் போது கப்பலின் அடித்தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து கடற்படை அதிகாரிகளும், கப்பல் ஊழியர்களும் தீவிரமாக செயல்பட்டு கப்பலில் பிடித்த தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தின் போது, தீ விபத்தால் ஏற்பட்ட புகை மூட்டத்தில் சிக்கிய கடற்படை அதிகாரி டி.எஸ்.சவுகானுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் மயங்கி விழுந்த அவரை கார்வார் துறைமுகத்தில் உள்ள கடற்படை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் கார்வார் துறைமுகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தீ விபத்து மற்றும் வீரர் மரணம் அடைந்தது தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு கடற்படை உத்தரவிட்டு உள்ளது. இந்தியாவிடம் உள்ள ஒரே விமானந்தாங்கி போர்க்கப்பல் ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா என்பது குறிப்பிடத்தக்கது.

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் அதிரடி: குற்றவாளிகள் மீது புது வழக்கு பதிவு
More News >>