தோனி இல்லாமல் மீண்டும் சொதப்பிய வீரர்கள்.... சொந்த மைதானத்தில் மோசமான சாதனை படைத்த சி.எஸ்.கே....
சொந்த மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமான சாதனை படைத்தது.
ஐபிஎல் தொடரின் 44வது லீக் போட்டி நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையே நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் கேட்பன் தோனி பங்கேற்கவில்லை. அதனால் சுரேஷ் ரெய்னா கேப்டனாக களமிறங்கினார். டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், குயிண்டன் டி காக்கும் களமிறங்கினர்.
அந்த அணியில் ஒருபுறம் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும் கேப்டன் ரோஹித் ஷர்மா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 48 பந்தில் 3 சிக்சர், 6 பவுண்டரியுடன் 67 ரன்கள் குவித்து அவுட்டானார். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 155 ரன்களை எடுத்தது.
எட்டக்கூடிய இலக்கை துரத்திய சென்னை அணிக்கு முரளி விஜய் வாட்சன் ஜோடி துவக்கம் தந்தது. முதல் ஓவரில் இரண்டு பவுண்டரிகளுடன் அசத்தல் தொடக்கம் கொடுத்த வாட்சன் அந்த ஓவரின் கடைசி பந்திலேயே அவுட் ஆனார். அடுத்தடுத்து வந்த வீரர்களும் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். இருப்பினும் முரளி விஜய் ஓரளவுக்கு தாக்குப்பிடித்தார். அவரும் 38 ரன்னில் வெளியேற சிஎஸ்கே 11.4 ஓவரில் 66 ரன்கள் எடுப்பதற்குள் முக்கியமான 6 விக்கெட்டுக்களை இழந்தது.
7-வது விக்கெட்டுக்கு பிராவோ உடன் சான்ட்னெர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தது. அணியின் எண்ணிக்கை 99 ரன்கள் இருந்த போது மலிங்கா பந்து வீச்சில் பிராவோ வெளியேற அடுத்த வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். இதனால் சென்னை அணி 109 ரன்களில் ஆல் அவுட் ஆகி 46 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. கேப்டன் தோனி இல்லாமல் சென்னை அணி சந்திக்கும் இரண்டாவது தோல்வி இது. இந்தப் போட்டியில் சென்னை அணி மோசமான இரண்டு சாதனைகளை படைத்தது. இந்த சீசனில் சொந்த மைதானத்தில் சென்னை சந்திக்கும் முதல் தோல்வி இது. கடந்த 19 போட்டிகளை எடுத்து கொண்டால் இது இரண்டாவது தோல்வி. இந்த இரண்டுமே மும்பை அணிக்கு எதிராக என்பது தான் கூடுதல் சோகம்.
கனவாகவே முடிந்த மகுடம்..... சாய்னா, சிந்து ஏமாற்றம்....