சென்னை தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த தீவிரவாதி கைது
சென்னையில் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த தீவிரவாதியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் காவலாளி, துப்புரவு பணியாளர்கள் என ஏராளமான வடமாநில வாலிபர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்கள், அமைந்தகரை அய்யாவு காலனி, பார்த்தசாரதி தெருவில் உள்ள ஒரு வீட்டில் தங்கி உள்ளனர்.
கைதான பயங்கரவாதி கந்தர்ப்பதாஸ், நேற்று முன்தினம் இரவு தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்த சக ஊழியர்களுடன் தகராறு செய்ததாக தெரிகிறது. அப்போது “நான் ஒரு பயங்கரவாதி. என்னிடம் வைத்துக்கொண்டால் உங்களை கொன்று விடுவேன்” என சக ஊழியர்களை மிரட்டினார்.
இதையடுத்து அந்த மருத்துவமனையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி ஒருவர், அந்த நபர் குறித்து இணையதளத்தில் தேடிப்பார்த்தார். அதில் அவர், மேற்கு வங்காள மாநிலத்தில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என்பது தெரிந்தது.
பின்னர் அவர் அமைந்தகரை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று அவரை கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரித்தனர்.
அமைந்தகரை போலீசார் மற்றும் கியூ பிரிவு போலீசார் தீவிரமாக நடத்திய விசாரணையில், அவர், அசாம் மாநிலத்தை சேர்ந்த கந்தர்ப்ப தாஸ்(வயது 26) என்பதும், இந்த மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்ததும் தெரிந்தது. ஆனால் அவர் பேசுவது தமிழக போலீசாருக்கு புரியாததால் அவரிடம் விசாரணை செய்வதில் சற்று தொய்வு ஏற்பட்டது. பின்னர் கந்தர்ப்பதாஸ் கைதான விவரம் கொல்கத்தா போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது.
கொல்கத்தா போலீசார் கந்தர்ப்ப தாஸ் குறித்து தமிழக போலீசாரிடம் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தனர். மேற்கு வங்காள மாநிலத்தில் ஜி.சி.எல்.ஓ. என்ற தடை செய்யப்பட்ட அமைப்பின் தலைவராக நிர்மல் ராய் என்பவரும், 2-வது நபராக கந்தர்ப்ப தாசும் உள்ளார். இவர்கள் ரெயில் நிலையம் மற்றும் அரசு அலுவலகங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கொல்கத்தா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் தீவிர சோதனை செய்ததில் அவர்கள் கூறியதுபோல் வெடிகுண்டு எதுவும் இல்லை. அது வெறும் புரளி என தெரிந்தது. இதையடுத்து அந்த அமைப்பைச் சேர்ந்த 4 பேரை கொல்கத்தா போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் கடந்த ஆண்டு இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே கந்தர்ப்ப தாஸ் வந்த தகவலை கொல்கத்தா போலீசார் கூறினர்.
இதனையடுத்து தமிழக போலீசார் அவனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கந்தர்ப்ப தாஸ் சென்னைக்கு வந்ததன் பின்னணி என்ன? என்பது தெரியவில்லை. வேறு எதுவும் சதி திட்டம் தீட்ட இங்கு வந்தாரா? என்ற கோணத்தில் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மீண்டும் குண்டுவெடிப்பு! –இலங்கை சூழல் குறித்து அமைச்சர் ருவான் விளக்கம்