பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் அதிரடி: குற்றவாளிகள் மீது புது வழக்கு பதிவு

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது பாலியல் பலாத்கார வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்து அதனை வீடியோவாக வெளியிட்ட வழக்கில் பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் 4 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இதில் புகார் கொடுத்த மாணவியின் அண்ணனை தாக்கிய வழக்கில் பார் நாகராஜ், பாபு, செந்தில், வசந்த், ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். தலைமறைவாக இருந்த மணிவண்ணன் கடந்த மாதம் 25ம் தேதி கோவை கோர்ட்டில் சரணடைந்தார். இதனை தொடர்ந்து திருநாவுக்கரசு மற்றும் மணிவண்ணனை சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர்.

விசாரணையின் போது, திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன், வசந்தகுமாருடன் சேர்ந்து பெண்களை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதனை செல்போனில் படம் பிடித்து நண்பர்களுக்கு அனுப்பியதாகவும் மணிவண்ணன் வாக்குமூலத்தில் தெரிவித்தார். இதனையடுத்து இந்த வழக்கில் மணிவண்ணனும் கைது செய்யப்பட்டார்.

இந்த சூழ்நிலையில் மணிவண்ணனின் வாக்குமூலத்தின் அடிப்படையிலும், 140 சாட்சிகளின் வாக்குமூலத்தின் அடிப்படையிலும் தற்போது கைது செய்யப்பட்ட 5 பேர் மீதும் இந்திய தண்டனை சட்டம் 376 (பலாத்காரம்) சேர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிபிசிஐடி போலீசார் கூறுகையில், ‘‘திருநாவுக்கரசு உள்ளிட்ட 5 பேர் மீது இப்போது பலாத்கார வழக்கு கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு 10 ஆண்டு அல்லது ஆயுள் தண்டனை கிடைக்கும். இந்த வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிகை விரைவில் தாக்கல் செய்யப்படும்’’ என்றனர்.

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் குற்றவாளிகள் மீது பிடி இறுகுவதால் அவர்கள் தப்பிக்க வாய்ப்பு இல்லை. விரைவில் அவர்களுக்கு தண்டனை கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

ஆட்சி கவிழ்ந்து விட்டால்..? அதற்காகத்தான்..! –அதிமுக கூட்டணியை விளாசிய ஈஸ்வரன்
More News >>