டி.ஜி.பி. அலுவலகத்துக்கு மிரட்டல்: நள்ளிரவில் பாம்பன் ரயில் பாலத்தில் வெடிகுண்டு தடுப்பு போலீசார் சோதனை
ராமேஸ்வரத்தில் பாம்பன் ரயில் மற்றும் சாலை பாலங்களில் வெடிகுண்டு தடுப்பு போலீசார் நேற்று இரவு பல மணி நேரம் சோதனை நடத்தினர்.
சென்னை டி.ஜி.பி. அலுவலகத்துக்கு நேற்று மர்ம நபர் ஒருவர் மிரட்டல் அழைப்பு விடுத்தார். ராமேஸ்வரம் பாம்பன் ரயில் மற்றும் சாலை பாலத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாக அந்த நபர் மிரட்டல் விடுத்தார். இதனையடுத்து, எஸ்.பி., தலைமையில் வெடிகுண்டு தடுப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
நேற்று இரவு பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலம், ரயில் பாலத்தில் எஸ்.பி., ஓம்பிரகாஷ் மீனா தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார், மோப்ப நாய் டயானா உதவியுடன் சோதனை நடத்தினர். பல மணி நேரம் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்தனர். பாலத்தில் ஏராளமான அதிரடிப் படை போலீசார் குவிக்கப்பட்டனர். வெடிகுண்டு ஏதும் சிக்காததால் அனைவரும் நிம்மதியடைந்தனர்.
இதற்கிடையே பாம்பன் ரயில்வே ஸ்டேஷனில் சந்தேகத்திற்கிடமாக ஒரு பெண் நின்றிருந்தார். இதனால் அந்த ரயில் நிலையத்தில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், ஊர், பெயர் கூட சொல்ல தெரியாமல் அந்த பெண் மனநிலை பாதிக்கப்பட்டிருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
நல்லவர்களாக நடித்து குண்டு போட்ட செல்வந்தர் குடும்பம்!!