மோடியின் குர்தா சைஸ் மம்தாஜிக்கு தெரியும் காங். நடிகர் சர்ச்சைப் பேச்சு!
பிரதமர் மோடியின் குர்தா சைஸ் மம்தா பானர்ஜிக்கு தெரியும் என்று உ.பி. காங்கிரஸ் தலைவரும், நடிகருமான ராஜ்பாப்பர் கூறியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த சில தினங்களுக்கு முன்பு பாலிவுட் நடிகர் அக்சய்குமாருக்கு ஒரு பேட்டியளித்தார். அப்போது அரசியலுக்கு அப்பாற்பட்டு பல தலைவர்களுடன் தனக்கு நட்பு உள்ளதாக குறிப்பிட்டார். மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் தலைவருமான மம்தா பானர்ஜி இப்போதும் தனக்கு குர்தாவும், கொல்கத்தா ஸ்வீட்சும் அனுப்பி வைக்கிறார் என்றும் சொன்னார்.
இதைக் கேட்ட மம்தா பானர்ஜி கொதித்து போனார். அடுத்த பொதுக் கூட்டத்தில் அவர் பேசும் போது, ‘‘நான் எல்லா தலைவர்களுக்கும் பரிசு பொருட்களையும், ஸ்வீட்சும் அனுப்பியிருக்கிறேன். மரியாதை நிமித்தமாக பிரதமருக்கு அனுப்பியதை அவர் அரசியலுக்கு பயன்படுத்துவதை வன்மையாக கண்டிக்கிறேன். அவரை பதவியில் இருந்து இறக்குவதுதான் என் ஒரே குறிக்கோள்’’ என்றார்.
இந்த சூழ்நிலையில், இந்தி நடிகரும், உ.பி. மாநில காங்கிரஸ் தலைவருமான ராஜ்பாப்பர், மம்தாபானர்ஜியை கிண்டல் செய்து சர்ச்சையை கிளப்பி விட்டிருக்கிறார். அவர் கூறுகையில், ‘‘மம்தா எங்களுக்கு எல்லாம் ஸ்வீட் அனுப்பியதில்லை. பிரதமருக்குத்தான் அனுப்பியிருக்கிறார். பிரதமரின் குர்தா சைஸ், மம்தாஜிக்கு தெரியும். பா.ஜ.க.வும், திரிணாமுல் காங்கிரசும் ரகசியமாக உறவு வைத்திருக்கின்றன’’ என்றார்.
இதைக் கேட்டு திரிணாமுல் காங்கிரசார் கோபமடைந்துள்ளனர். திரிணாமுல் தலைவர் பார்த்தா சட்டர்ஜி கூறுகையில், ‘‘ராஜ்பாப்பர் ஒரு சினிமா நடிகர். அரசியலில் அனுபவமே இல்லாதவர். அந்த நடிகருக்கு மரியாதையே தெரியாது. அரசியல் நாகரீகமே தெரியாமல் அவர் பேசுவதை வன்மையாக கண்டிக்கிறோம்’’ என்று கூறியுள்ளார்.
கொல்கத்தா குர்தாவும், ரசகுல்லாவும் மிகவும் பிரபலம். அதனால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மற்ற அரசியல் கட்சித் தலைவர்களுக்கு புத்தாண்டு தின வாழ்த்து கூறும் போது அவற்றை அனுப்பி வைப்பதுண்டு.
பரிசுகள் தருவதால் ஓட்டுகளையும் தருவார்கள் என பகல் கனவு காணவேண்டாம்; மோடிக்கு மம்தா பதிலடி!