ராகுலை விட இவர்கள் பெட்டர்! சரத்பவார் சர்டிபிகேட்!!

பிரதமர் பதவிக்கு ராகுல்காந்தியை விட மம்தா பானர்ஜி, மாயாவதி அல்லது சந்திரபாபு நாயுடு ஆகியோரில் ஒருவர் சிறந்தவராக இருப்பார்கள் என்று சரத்பவார் கூறியிருக்கிறார்.

மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. எப்படியாவது இந்த தேர்தலில் பிரதமர் மோடியை வீழ்த்தி விட வேண்டும் என்பதில் எல்லா எதிர்க்கட்சிகளுமே குறியாக இருக்கின்றன. அதற்காக மேடையில் மட்டும் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்கிறார்கள். ஆனால், கூட்டணி என்று பேச்சை ஆரம்பித்தால் காததூரம் ஓடி விடுகிறார்கள்.

எதிர்க்கட்சிகளில் பெரிய கட்சி என்ற அடிப்படையில் தங்கள் தலைமையில் ஆட்சி அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது. ஆனால், ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக ஏற்க பல கட்சிகளுக்கு தயக்கம். தி.மு.க., மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் மட்டுமே ராகுலுக்கு ஆதரவாக இருக்கி்ன்றன.

இந்த சூழலில், பிரதமர் பதவிக்கு ராகுல்காந்தியை மம்தா, மாயாவதி, சந்திரபாபு நாயுடு ஆகியோரில் ஒருவர் பெட்டர் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியுள்ளார். ZEE NEWS டிவி சேனலுக்கு அவர் அளித்த பேட்டி வருமாறு:

பா.ஜ.க. கூட்டணியில் இடம் பெறாத கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து மகா கூட்டணி அமைக்கும் முயற்சி பலிக்கவில்லை. அதனால், எல்லோருமே ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக் கொண்டு விட்டதாக கூற முடியாது. என்னைப் பொறுத்தவரை ராகுல்காந்தியை விட பிரதமர் பதவிக்கு மம்தா பானர்ஜி, மாயாவதி அல்லது சந்திரபாபு நாயுடு ஆகியோரில் ஒருவர் பெட்டராக இருப்பார்கள்.

2004ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் எல்லோரும் தனித்தனியாக போட்டியிட்டோம். ஆனால், தேர்தலுக்கு பின்பு ஒன்று சேர்ந்து ஆட்சியமைத்தோம். அதே போல், தேர்தல் முடிவுகள் வந்ததும், தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகள் கூட எங்களுடன் வரும். அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஸ்திரமான ஆட்சியை அமைப்போம்.இவ்வாறு சரத்பவார் கூறியுள்ளார்.

மாயாவதி ஏற்கனவே தனக்கு பிரதமர் பதவி மீது ஆசை உள்ளதை வெளிப்படுத்தியிருக்கிறார். மம்தா பானர்ஜியும், சந்திரபாபு நாயுடுவும், மோடியை வீட்டுக்கு அனுப்புவதுதான் முதல் வேலை என்று கூறி வருகிறார்கள்.

இதற்கிடையே, 78 வயதான மூத்த தலைவர் என்பதால் இவர் மூலமே எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது. எனவே, ராகுல் வேண்டாம் என்றால் அதை ஏற்க காங்கிரசும் தயாராகவே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

மோடி மீண்டும் பிரதமரானால்...! ராகுல் காந்தியே காரணம்...! கெஜ்ரிவால் தடாலடி
More News >>