ஆண், பெண் திருமண விஷயத்தில் பெற்றோருக்கு கூட உரிமையில்லை - உச்சநீதிமன்றம் மீண்டும் எச்சரிக்கை
வயது வந்த ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொள்ளும் விஷயத்தில், அவர்களின் பெற்றோரோ அல்லது சமூகமோ தலையிட எந்தவித அதிகாரமும் கிடையாது என்று உச்சநீதிமன்றம் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது.
ஹரியானா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிகளவில் நடைபெறும் கட்டப் பஞ்சாயத்துகளை குறிப்பிட்டு, சக்தி வாஹினி என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் கடந்த 2010-இல் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது.
வட இந்தியாவின் பல்வேறு கிராமங்களில் ‘காப்’ பஞ்சாயத்து எனப்படும் ஊர் பஞ்சாயத்து செயல்படுகிறது. இங்கு சாதாரண அடிதடி பிரச்சனையில் தொடங்கி குடும்ப பிரச்சனை வரை விசாரித்து, இந்த ஊர்ப் பஞ்சாயத்துதான் தீர்ப்புவழங்குகிறது.
குறிப்பாக இரு வேறு சாதிகளைச் சேர்ந்த ஆணும் பெண்ணும் காதலித்து திருமணம்செய்து கொண்டால் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குகிறது; சாதி மாறி திருமணம் செய்பவர்களை கட்டப்பஞ்சாயத்து மூலம் தாக்குவதும், பிரித்து வைப்பதும் நடக்கிறது. எனவே இந்த கட்டப்பஞ்சாயத்து முறைக்கு முடிவு கட்ட வேண்டும்”என்று அந்த மனுவில் சக்திவாஹினி அமைப்பு கூறியிருந்தது.
கடந்த ஜனவரி 16-ஆம்தேதி இவ்வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய். சந்திரசூட் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, “திருமண வயது வந்த ஆணும் பெண்ணும் காதல் திருமணம் செய்வதை தடுப்பது சட்டவிரோதம்; சாதி மறந்து காதல் திருமணம் செய்வதை தடுக்கும் அதிகாரம் பெற்றோர், சாதிஅமைப்பு, கட்டப் பஞ்சா யத்து, ஊர்ப்பஞ்சாயத்து, சமூகம் என யாருக்கும் கிடையாது” என்று தெரிவித்தனர்.
இந்நிலையில், திங்களன்று இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த வழக்கில் ஆஜரான சமூக செயற்பாட்டாளர் மது கிஷ்வர், “தில்லியில் இளைஞர் அங்கீத் சக்சேனா, தனது காதலியின் பெற்றோரால் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது; கவுரவக் கொலை என கூறுவதுகூட மென்மையான வார்த்தைப் பிரயோகமாக இருக்கிறது; இவற்றை மிக மோசமான குற்றமாக வகைப்படுத்த வேண்டும்” என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “வயது வந்தஆண் - பெண் இருபாலரும் விரும்பித் திருமணம் செய்து கொள்ளவிரும்பினால், அதற்கு தடை ஏதுமில்லை; சட்டம் அதனை முழுமையாக அங்கீகரிக்கிறது; அவர்களின் பெற்றோர், சமூகம் என யாருக்கும், இதில் தலையிட உரிமையில்லை; இது போன்ற திருமணங்களில் ஊர்ப் பஞ்சாயத்து தலையிடுவதை ஏற்க முடியாது; அவ்வாறு தலையிட உரிமை ஏதும் இல்லை” என்ற தங்களின் முந்தைய கருத்தை தெளிவுபடுத்தினர்.
நாட்டில் நடக்கும் சாதி ஆணவக் கொலைகளை நீதிமன்றங்கள் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டேதான் இருப்பதாக கூறிய நீதிபதிகள், “கட்டப் பஞ்சாயத்து என்ற பெயரில் சாதிமறுப்பு திருமண விஷயங்களில் மூக்கை நுழைக்கும் மூன்றாவது நபர்களின் தலையீடே சாதி ஆணவக் கொலைகளுக்கு காரண மாக அமைகிறது” என்றும் குறிப்பிட்டனர்.