இலங்கை பயணத்தை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும் - வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தல்

தொடர் குண்டு வெடிப்பால் பதற்றமாக காணப்படும் இலங்கைக்கு பயணம் செல்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இலங்கை தலைநகர் கொழும்பு நகரின் புறநகர் பகுதியில் கடந்த ஞாயிறன்று பயங்கரவாதிகள் நடத்திய தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலால் அந்நாட்டில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. அடுத்தடுத்த நாட்களிலும் குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்வதால் இலங்கை முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு இரவு நேரத்தில் ஊரடங்கு உத்தரவும் பிறக்கப்பட்டுள்ளது. மேலும் ஐஎஸ் தீவிரவாதிகளும் நாட்டுக்குள் ஊடுருவி இருப்பதும் உறுதியாகியுள்ளது. நேற்று முன்தினம் கல்முனை பகுதியில் பதுங்கி இருந்த தீவிரவாதிகளை இலங்கை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தபோது, பதில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் கடைசியில் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்ற ஐஎஸ் தீவிரவாத அமைப்பு, வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து உயிரிழந்த அந்த அமைப்பின் தீவிரவாதிகள் 3 பேர் பெயரையும் வெளியிட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் தீவிரவாதிகளை வேட்டையாடும் பணியை இலங்கை அரசு முடுக்கிவிட்டுள்ளது.

இந்நிலையில் தான் அநாவசியமாக இந்தியர்கள் யாரும் இலங்கை செல்வதை தவிர்க்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அவசிய, அவசரப் பயணம் மேற்கொள்வோர் இலங்கையில் 2 ள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு தக்க பாதுகாப்புடன் பயணம் மேற்கொள்ளவும் வெளியுறவுத் துறை அறிவுரை வழங்கியுள்ளது.

இலங்கையில் ஐஎஸ் தீவிரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை
More News >>