தங்க மங்கை கோமதிக்கு திமுக சார்பில் ரூ .10 லட்சம் - மு.க.ஸ்டாலின் வழங்கினார்

தோஹா ஆசிய தடகளப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துவுக்கு திமுக சார்பில் ரூ.10 லட்சம் நிதி உதவியை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

கத்தார் தலைநகர் தோஹாவில் சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய தடகளப் போட்டியில், 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்று சாதனை படைத்தார் தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து . திருச்சி மாவட்டத்தில் அடிப்படை வசதிகள் இல்லாத ஒரு குக்கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த கோமதி, பல்வேறு சோதனைகள், தடைகளைத் தாண்டி இச்சாதனையைப் படைத்தார்.

தங்கப் பதக்கம் வென்று சென்னை திரும்பிய கோமதிக்கு அரசுத் தரப்பில் உரிய மரியாதை செய்யப்படாவிட்டாலும், விளையாட்டு ஆர்வலர்கள்,தன்னார்வலர்கள், பல்வேறு அமைப்பினர், தனியார் பள்ளி நிர்வாகத்தினர் என பலரும் திரண்டு உற்சாக வரவேற்பளித்தனர்.

அப்போது பேசிய கோமதி, தாம் விளையாட்டில் சாதனை படைக்க பட்ட கஷ்டங்களை உருக்கமாக கூறியிருந்தார். கிழிந்த ஷூ வுடன் போட்டியில் பங்கேற்றதை வேதனையுடன் கூறிய கோமதி, விளையாட்டை மேம்படுத்த வருங்கால சந்ததியினருக்காகவாவது வசதிகள் செய்து தர வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தான் கோமதிக்கு வாழ்த்துக்களும், ஆதரவும், உதவிகளும் குவிந்து வருகின்றன. முதன்முதலாக நடிகர் ரோபோ சங்கர் ரூ 1 லட்சம் உதவி அளிக்க, தனியார் பள்ளி ஒன்றின் சார்பில் ரூ 3 லட்சம் வழங்கப்பட்டது.தமிழக காங்கிரஸ் தரப்பில் ரூ.5 லட்சம் , திமுக சார்பில் ௹ 10 லட்சம் வழங்கப்படும் என்றும் நேற்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று அண்ணா அறிவாலயம் வருகை தந்த தங்க மங்கை கோமதிக்கு வாழ்த்துக்களையும், பாராட்டையும் தெரிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ரூ 10 லட்சம் நிதி உதவியையும் வழங்கினார்.

More News >>