`25 நாட்களுக்குள் ஆட்சியை மாற்றிக் காட்டுகிறேன் - துரைமுருகன் சவால்!
அடுத்த 50 ஆண்டு காலத்திற்கு ஸ்டாலின் கையில் தான் தமிழகம் இருக்கும் என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம் ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் மே 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. 18 தொகுதிகளுக்கு மக்களவைத் தேர்தலுடன் இடைத்தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், அடுத்து இந்த நான்கு தொகுதிகளும் கவனம் பெற்றுள்ளன. எம்.எல்.ஏ கனகராஜ் மறைவால் காலியான சூலூர் சட்டமன்றத் தொகுதி, இந்த தேர்தல் களத்தில் தனி கவனம் பெற்றுள்ளது. இங்கு, திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி வேட்பாளாராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக சார்பில் கோவை புறநகர் மாவட்ட அம்மா பேரவைத்தலைவர் வி.பி.கந்தசாமி போட்டியிடுகிறார். அமமுக சார்பில் முன்னாள் எம்.பி சுகுமார் நிறுத்தப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இன்று திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமியை அறிமுகப்படுத்தும் கூட்டம் சூலூரில் நடந்தது. இதில் திமுக பொருளாளர் துரைமுருகன் கலந்துகொண்டார். இதில் பேசிய அவர், ``என்னுடைய அரசியல் அனுபவத்தில் இருந்து கூறுகிறேன். எங்களுக்கு வந்த செய்திப்படி திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளில் திமுக தான் வெல்லும். நீங்கள் சூலூரை மட்டும் வென்று கொடுங்கள். 25 நாட்களுக்குள் ஆட்சியை மாற்றிக் காட்டும் பொறுப்பை நான் ஏற்கிறேன். கருணாநிதியிடம் இருந்து ராஜதந்திரத்தை ஓரளவு கற்றுள்ளேன். அடுத்த 50 ஆண்டு காலத்திற்கு ஸ்டாலின் கையில் தான் தமிழகம் இருக்கும்" எனக் கூறினார்.