பிச்சை எடுப்பதை விட பக்கோடா விற்பது மோசமல்ல - பாராளுமன்றத்தில் அமித் ஷா

பிச்சை எடுப்பதைவிட ‘பக்கோடா’ விற்பது ஒன்றும் மோசமல்ல என்றும் வேலை இல்லாமல் இருப்பதைவிட ‘பக்கோடா’ விற்கலாம் என்றும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தனது பாராளுமன்ற கன்னிப்பேச்சில் கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக, நாடு முழுவதும் ‘பக்கோடா’ போராட்டம் பிரபலமாகி வருகிறது. 2018-19 பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி, தனியார் செய்தி சேனலுக்கு பேட்டியளித்தார். அப்போது, ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்ற வாக்குறுதி தொடர்பாக மோடியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த பிரதமர் மோடி, “இன்றைய தினம் இளைஞர்கள் பக்கோடா விற்று தினமும் 200 ரூபாய் சம்பாதிக்கிறார்கள் என்றால் அதுவும் கூட வேலைவாய்ப்புதான்” என்று பதிலளித்தார். இது சர்ச்சையாக பேசப்பட்டது. வேலைவாய்ப்பு தொடர்பாக ஒரு பிரதமர் இப்படித்தான் பதில் அளிப்பதா? என்று கண்டனங்கள் எழுந்தன.

பிரதமருக்கு தங்களின் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், பெங்களூருவில் உள்ள பாஜக அலுவலகம் முன்பு பக்கோடா கடை திறந்து இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். அவர்கள் பக்கோடா தயார் செய்து அவ்வழியாக சென்றவர்களுக்கு “மோடி பக்கோடா, அமித்ஷா பக்கோடா, எடியூரப்பா பக்கோடா” என விற்பனை செய்தனர்.

இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூரிலும் பக்கோடா கடை திறந்தனர். சமாஜ்வாதி கட்சித் தலைவர் ஆசம் கான் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்திலும் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு, பக்கோடா தயாரித்து பொதுமக்களுக்கு வழங்கினர்.

இந்த நடவடிக்கைகள் பாஜகவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, எரிச்சலையும் ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், நேற்று பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, நாடாளுமன்றத்தில் தனது கன்னிப் பேச்சை ஆரம்பித்தார்.

அப்போது பேசிய அவர், “பிச்சை எடுப்பதைவிட ‘பக்கோடா’ விற்பது ஒன்றும் மோசமல்ல: வேலை இல்லாமல் இருப்பதைவிட ‘பக்கோடா’ விற்கலாம்; ‘பக்கோடா’ விற்பது எவ்வளவோ மேலானது ‘பக்கோடா’ விற்பதில் எந்த அவமானமும் இல்லை” என்று கூறியுள்ளார்.

மேலும், “தேனீர் விற்றவரின் மகன் (மோடி) நாட்டின் பிரதமராக முடியும் என்றால், பக்கோடா விற்றவர் எதிர்காலத்தில் பெரிய தொழிலதிபராகவும் வாய்ப்புள்ளது” என்றும் பேசியுள்ளார்.

More News >>