கன்னியாதானம் செய்த சென்னைக்கார அம்மா!- மாற்றம் வேண்டும்தானே?

மகளின் கல்யாணத்தில் வழக்கமாக அப்பாதான் கன்னியாதானம் சடங்கை செய்வார். ஆனால், தன் மகளின் கன்னியாதானத்தைச் செய்து வைத்த இந்த சென்னைக்கார அம்மாதான் இன்றைய மாற்றத்தின் முன்னோடி.

திருமண விழாவில் கன்னியாதானம் என்பது முக்கிய சடங்கு முறை ஆகும். பெரும்பாலும் இந்து முறைப்படி நடைபெறும் திருமணங்களில் இந்த சடங்கு நிகழும். மணப்பெண்ணின் தந்தை தன் மகளை மனநிறைவுடன் மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து வைப்பதாக உறுதி அளிக்கும் வகையில் நடைபெறும் ஒருவித சடங்கு முறைதான் ‘கன்னியாதானம்’.

ஆனால், சந்தியாவின் கல்யாணம் மிகவும் வித்தியாசமாகவே நடத்தப்பட்டது. ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் சென்னயைப் பூர்விமாகக் கொண்ட ராஜேஸ்வரி, தன் மகள் சந்தியாவின் காதல் கல்யாணக் கனவை வித்தியாசமாகவே நிறைவேற்றியுள்ளார். ராஜேஸ்வரி தன் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

 

மகள் ஆஸ்திரேலியாவில் வளர்ந்தாலும் தமிழகப் பிராமணப் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்துகொள்ள விரும்பினார். மகளின் ஆசையைப் புரிந்துகொண்ட தாய் ராஜேஸ்வரி, சென்னையில் உடனடியாகத் திருமண ஏற்பாட்டைக் கவனிக்கத் தொடங்கினார். திருமண நாள் அன்று தன் மகளை ஒரு தந்தையின் ஸ்தானத்திலிருந்து தன் மடியில் அமர வைத்து மாப்பிள்ளைக்கு கன்னியாதானம் செய்து வைத்தார்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சாம் தன் காதலியின் விருப்பத்துக்கு இணங்க தமிழ் பிராமண முறைப்படி சந்தியாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் ஜனவரி மாதமே நடந்து முடிந்திருந்தாலும், இவர்களின் திருமண கன்னியாதானம் வைபவ புகைப்படம் ஒன்று சமீபத்தில் நண்பர் ஒருவரால் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டது. இந்தப் புகைப்படம்தான் தற்போது வைரலாகி உள்ளது.

இதுகுறித்து தாய் ராஜேஸ்வரி கூறுகையில், “மகளின் திருமணத்தின் போது கன்னியாதானத்தை நானே செய்து வைக்கப்போகிறேன் எனக் குடும்பத்தாரிடம் கூறியபோது அனைவரும் ஆதரவு அளித்தனர். எனது மகளின் விருப்பத்தை நிறைவேற்றியதே பெரிய சந்தோஷம்” என்கிறார்.

 

 

 

More News >>