முகத்தை மறைக்கும் புர்கா உள்ளிட்ட ஆடைகளுக்கு இலங்கை அரசு தடை - இன்று முதல் அமல்

பாதுகாப்பை கருத்தில் கொண்டு இலங்கையில் முக அடையாளங்களை மறைக்கும் ஆடைகளுக்கு இன்று முதல் தடை விதிக்கப்படுவதாக அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா அறிவித்துள்ளார்.

இலங்கையில் கடந்த 21-ந் தேதி ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று பயங்கரவாதிகள் நடத்திய தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலில் 250-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் தொடர்பாக இதுவரை 106 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இலங்கையில் ஐஎஸ் பயங்கரவாதிகள் ஊடுருவி பல இடங்களில் பதுங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியான நிலையில், அந்நாட்டு பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர். கடந்த வெள்ளியன்று கல் முனை என்ற இடத்தில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் 3 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். அப்போது அங்கு ஏராளமான வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், முக்கிய இடங்கள் மற்றும் நகரங்களுக்கு தீவிரவாதிகள் குறிவைத்திருக்கலாம் என்ற அச்சம் இன்னும் நீடிக்கிறது.

இதனால் நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனம் மற்றும் இரவு நேரத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது முக அடையாளங்களை மறைக்கும் ஆடைகள் அணியவும் அந்நாட்டு அரசு இன்று முதல் தடை விதித்துள்ளது. முகத்தை மூடும் வகையிலும், அடையாளத்தை மறைக்கும் வகையிலும் புர்கா உள்ளிட்ட எந்தவொரு ஆடைகளையும் அணியக்கூடாது என அந்நாட்டு அதிபர் சிறிசேனா உத்தரவிட்டுள்ளார். நாட்டின் பாதுகாப்பையும், மக்களின் பாதுகாப்பையும் கருத்திற் கொண்டே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.

அச்சம்.. பீதி .. கோபம்.. வருத்தம்..! இலங்கை குண்டு வெடிப்பு சூத்திரதாரி சஹ்ரான் ஹசீமின் ஊரான 'காத்தான்குடி' நிலவரம்
More News >>