நடிகர்கள் மீதான பைத்தியத்தால் தமிழ்நாடு குட்டிச்சுவர் - சுப்பிரமணிய சாமி தாக்கு
சினிமா நடிகர்கள் மீதான பைத்தியத்தால் தமிழ்நாடு குட்டிச்சுவர் ஆகிக் கொண்டிருக்கிறது என்று பாஜக மூத்தத் தலைவர்களுல் ஒருவரான சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணிய சாமி, “தமிழகத்திற்கு தண்ணீர் வேண்டுமானால் ஏற்பாடு செய்து கொடுக்கலாம். ஆனால் காவிரி நீர் கிடைக்காது. சும்மா நாடகம் ஆடுகிறார்கள். கடல் நீரை சுத்திகரித்து குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு கொடுக்கலாம். இது முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோருக்கு தெரியாதா?
என்னிடம் தீர்வு கேட்டால் இஸ்ரேலில் இருந்து எந்திரத்தை வரவழைத்து கடற்கரையில் வைத்தால் நீர் பிரச்சனையே இருக்காது. இந்த திட்டத்தை 4 மாதங்களில் செயல்படுத்த முடியும். எம்.பி.க்கள் மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தை புறக்கணித்துவிட்டதாக நினைத்தால் 40 எம்.பி.க்களும் நாடாளுமன்றத்தில் அது குறித்து பேச வேண்டும். அவர்கள் எல்லாம் டெல்லியில் என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை.
டிடிவி தினகரனின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் துணிச்சலாக போட்டியிட்டு வென்றுள்ளார். அவரின் வளர்ச்சியை பார்த்து மகிழ்ச்சியாக உள்ளது. அவருக்கு என் வாழ்த்துக்கள்.
சினிமா நடிகர்கள் மீதான பைத்தியத்தால் தமிழ்நாடு குட்டிச்சுவர் ஆகிக் கொண்டிருக்கிறது. எனக்கு பதவி ஆசை இல்லை. 2ஜி வழக்கில் 10 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்யப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.