மே.வங்கத்தில் வாக்குப்பதிவில் வன்முறை - போலீசாருடன் திரிணாமுல் கட்சியினர் அடிதடி

மே.வங்கத்தில் வாக்குப் பதிவின் போது வன்முறை வெடித்தது. போலீசாருடன் திரிணாமுல் கட்சித் தொண்டர்கள் கம்புகளுடன் அடிதடியில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

மே.வங்கத்தில் மக்களவை பொதுத் தேர்தலில், இந்த முறை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், காங்கிரஸ், பாஜக என நான்கு முனைப்போட்டி நிலவுகிறது. 4 கட்சி களிடையே கடும் போட்டி நிலவுவதால் அந்த மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போதே பல இடங்களில் வன்முறை வெடித்தது. இந்நிலையில் மே.வங்கத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் இன்று நடைபெறும் நான்காம் கட்டத் தேர்தலில் 8 தொகுதிகளில் வாக்குப்பதிவு காலையில் தொடங்கியது.

அசன் சோல் மக்களவைத் தொகுதியில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில், மத்தியப் பாதுகாப்பு படையினர் இல்லாமலே வாக்குப்பதிவை தொடங்க ஆளும் திரிணாமுல் கட்சியினர் முயன்றனர். இதற்கு பாஜக மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினர் கடும் எதிர்ப்பு காட்ட பிரச்னை வெடித்தது. இதனால் வெளியில் காவலுக்கு நின்றிருந்த அதிவிரைவுப் படையினரும், போலீசாரும் திரிணாமுல் கட்சித் தொண்டர்களை வாக்குச்சாவடியிலிருந்து விரட்டியடித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த திரிணாமுல் கட்சி தொண்டர்கள் பதிலுக்கு பெரிய பெரிய கம்புகளுட.ன் போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். திரிணாமுல் கட்சி பெண் தொண்டர்களுடன் கம்புகளுடன் வன்முறையில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியே போர்க்களமானது.

தொடர்ந்து பதற்றம் நிலவியதால் கூடுதல் படையினர் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த மோதல் காரணமாக அந்த வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியது.

More News >>