பாதுகாப்பு படை குறித்து பிரச்சாரம் -பிரதமர் மோடி, அமித்ஷா மீது உச்ச நீதிமன்றத்தில் காங். வழக்கு

தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித் ஷாவும் தொடர்ந்து ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படை குறித்து பேசி வருவதை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர், இந்திய பாதுகாப்பு படைகள் குறித்தோ, வீரர்களின் பெயரையோ, ராணுவ சீருடையையோ எந்தவிதத்திலும் பயன்படுத்தக் கூடாது என்று தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது. ஆனால் இதை ஒரு பொருட்டாக மதிக்காமல் பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா உள்ளிட்ட அக்கட்சியின் தலைவர்கள் பலரும் பாகிஸ்தானில் நடத்தப்பட்ட விமான தாக்குதல், பாகிஸ்தான் வசம் சிக்கி மீட்கப்பட்ட விமானப் படை விமானி அபி நந்தன் பற்றியும் பெருமையாக பேசி வருகின்றனர்.

மேலும் முதல் தலைமுறை வாக்காளர்கள், தங்கள் முதல்வாக்கை புல்வாமா தாக்குதலில் உயிர் நீத்த வீரர்களுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்றெல்லாம் பேசி வருகின்றனர்.

பிரதமர் மோடி உள்ளிட்டோர் தொடர்ந்து பாதுகாப்பு படை குறித்து பேசி வருவதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததுடன் தேர்தல் ஆணையத்திலும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி காங்கிரஸ் சார்பில் சுஷ்மிதா தேவ் என்பவர் உச்ச நீதி மன்றத்தில் இன்று வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.

வாரணாசிக்கு படையெடுத்த தெலுங்கானா விவசாயிகள் - பிரதமர் மோடியை எதிர்த்து 50 பேர் போட்டி
More News >>