தேர்தல் விதிதான் தடங்கலுக்கு காரணம்..! தங்க மங்கை கோமதிக்கு போதிய அளவு கவுரவிப்போம்...! அமைச்சர் ஜெயக்குமார் உறுதி
ஆசிய தடகளத்தில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துக்கு தமிழக அரசு சார்பில் கெளரவிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தவறானது. தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்பட்ட பின் தமிழக அரசு, கோமதி விரும்புகிற அளவுக்கு போதிய உதவிகளை அறிவிக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தோஹாவில் நடந்த ஆசிய தடகளப் போட்டியில் 800 மீட்டர் ஒட்டத்தில் தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து தங்கம் வென்றார்.சென்னை திரும்பிய கோமதிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வறுமையிலும், போதிய அடிப்படை வசதி இல்லாத நிலையிலும் பல்வேறு சிரமங்களுக்கு இடையே இந்த சாதனை படைத்ததாக கோமதி உருக்கமாக கூறியிருந்தது விளையாட்டு ஆர்வலர்களை பதறச் செய்தது. தொடர்ந்து அவருக்கு உதவிகளும் குவியத்தொடங்கியது. திமுக தரப்பில் ரூ.10 லட்சம், காங்கிரஸ் கட்சி ரூ.5 லட்சமும் நிதி உதவி செய்த நிலையில் தனியார் பலரும் முன் வந்து உதவி செய்து வருகின்றனர்.
ஆனால் தமிழக அரசுத் தரப்பில் பரிசுத்தொகை அறிவிக்காததும், விமான நிலைய வரவேற்பு கொடுக்காததும் பெரும் விமர்சனத்தையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி இருந்தது.இந்நிலையில் இன்று சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
விளையாட்டு துறைக்கு எப்பொழுதுமே அதிமுக அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. தேர்தல் விதிமுறைகள் அமலில் இருப்பது தான் கோமதிக்கு உதவிகள் அறிவிப்பதில் தாமதம். தேர்தல் விதிமுறைகள் தளர்த்தப்பட்டதும் வீராங்கனை கோமதி விரும்புகிற அளவுக்கு அவருக்கு உதவி செய்ய தமிழக அரசு தயாராக இருக்கிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் உறுதி தெரிவித்தார்.
தங்க மங்கை கோமதிக்கு திமுக சார்பில் ரூ .10 லட்சம் - மு.க.ஸ்டாலின் வழங்கினார்